கங்கனாவின் ’லாக்கப்' நிகழ்ச்சிக்கு திடீர் தடை


நடிகை கங்கனா ரனாவத்தின் ’லாக்கப்’ நிகழ்ச்சிக்கு ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ’லாக்கப்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளார். இதை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்குகிறார். இதில் ஸ்டாண்ட் அப் காமெடியன் முனவர் பரூக்கி, நடிகைகள் பூனம் பாண்டே, ஹினா கான், ஸ்வேதா திவாரி உட்பட 16 பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

தனியாக லாக்கப்பில் அடைக்கப்படும் அவர்களுக்கு, ஃபோன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் சில மாதங்கள் உள்ளே இருப்பது போல இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. எம்.எக்ஸ் பிளேயர் தளத்தில் இன்று முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது.

கங்கனா

இந்நிலையில் இந்த ’த ஜெயில்’ கான்செப்ட் தங்களுக்கானது என்றும் அதை அப்படியே தழுவி, லாக்கப் என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர் என்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பிரைட் மீடியா என்ற நிறுவனம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ‘லாக்கப் புரமோ நிகழ்ச்சியை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அது எங்கள் கான்செப்ட்டின் அப்பட்டமான காப்பி. இந்த கான்செப்ட் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. காப்புரிமை சட்டத்தின் கீழும் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது’என பிரைட் மீடியா நிறுவன உரிமையாளர் சனோபெர் பைக் கூறியிருந்தார்.

இதையடுத்து ’லாக்கப்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

x