பஞ்சாப்பின் போதைப் பொருள் கடத்தலை முன்வைத்து உருவான, மற்றுமொரு திரை படைப்பாக ’கேட்’ என்னும் வலைத்தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. ரந்தீப் ஹூடா நடிக்கும் இந்த தொடர் குறித்து நெட்ஃபிளிக்ஸ் இந்தியா இன்று(பிப்.22) அறிவிப்பு வெளியிடுள்ளது.
எல்லை மாநிலமான பஞ்சாப் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் அபாயத்துக்கு உட்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பரவல் காரணமாக பஞ்சாப்பின் இளம் தலைமுறையினர் சீரழிந்து போவதை முன்வைத்து ஏராளமான பாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் பிரச்சாரங்களிலும் போதை தடுப்பு வாக்குறுதிகள் அதிகம் இருக்கும்.
திட்டமிட்டு ஊடுருவும் போதைப் பொருளால் பஞ்சாப்பியர் அடிமையாவது மட்டுமன்றி, இதன் வர்த்தகத்தை முன்வைத்து ஏராளமான குழு மோதல்கள், பழிவாங்கல் நடவடிக்கைகளும் அங்கே அதிகம். இவற்றை முன்வைத்து உருவாகும் திரைபடைப்புகளின் வரிசையில், புதிய வலைத்தொடர் ஒன்றினை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
’கேட்’(CAT) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வலைத்தொடரின் பிரதான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்துள்ளார். போதைப்பொருள் கேங்ஸ்டர் மோதலை மையமாக வைத்து, வஞ்சம் தீர்க்கும் த்ரில்லராக வலைத்தொடரின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழும் ரகசிய உளவாளியாக ரந்தீப் ஹூடா தோன்றுகிறார். வலைத்தொடரை பல்விந்தர் சிங் ஜனுஜா இயக்கியுள்ளார். ’கேட்’ வலைத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா இன்று(பிப்.22) வெளியிட்டுள்ளது.