ஒடிடி தளத்தை குத்தகைக்கு எடுக்கிறது கேரள அரசு


மலையாளப் படங்களுக்காக, கேரள அரசு குத்தகைக்கு ஒடிடி தளத்தை வாங்க இருக்கிறது.

கரோனா முதல் அலையின் போது திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப்படங்கள் ரிலீஸாக முடியாமல் முடங்கின. திரைத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உண்டானதால், பல்வேறு படங்கள் நேரடியாக ஒடிடியில் வெளியானது. மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ உட்பட சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இதைக் கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கேரள அரசு கடந்த வருடம் அறிவித்தது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி அதை அறிமுகப்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால், அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில், தனியார் நிறுவனத்திடம் இருந்து 2 வருடங்களுக்கு ஒடிடி தளத்தைக் குத்தகைக்கு எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக விடப்பட்ட டெண்டரில் 8 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. இதன் தர ஆய்வு கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொழில்நுட்பக் குழுவின் மேற்பார்வையின் கீழ் நாளை நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிதி பரிவர்த்தனை, தொழில்நுட்பங்கள் குறித்து அந்த குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதில் இருந்து மார்ச் மாதம் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

’தனியார் தளத்தின் செயல்பாடுகள் இரண்டு வருடத்துக்கு இருக்கும். அதற்குள் அரசு சொந்தமாக ஒடிடி தளத்தைத் தொடங்கிவிடும். இந்த தளத்தில் வெளியாகும் படங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும். புதிய திரைப்படங்கள் மட்டுமின்றி, திரையரங்கில் வெளிவராத விருது பெற்றத் திரைப்படங்களும் திரையிடப்படும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x