பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்ஹாசன்?


கமல்ஹாசன்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து கமல்ஹாசன் விலகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் 5 சீசன்களை முடித்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார்.

5 சீசன்களுக்கும் அவரே ஒப்பந்தமான நிலையில், கமலின் கரோனா பாதிப்பு காரணமாக, இடையில் ஒரு எபிசோட் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். 5 சீசன்கள் முடிவடைந்ததும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் பிக்பாஸின் ஓடிடி வடிவம் தமிழுக்கு வந்தது. பிக்பாஸ் இந்தி ஓடிடி போலவே தமிழிலும் முந்தைய சீசன்களில் பங்கு பெற்ற சுவாரசிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் வனிதா, பாலாஜி முருகதாஸ், தாமரை, நிரூப், அனிதா, ஜூலி என 14 போட்டியாளர்கள் களம் இறங்கினர். 24*7 என நேரலையாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் மற்றும் செயலியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நாள் முழுக்க ஒளிபரப்பாகும் இதனை லைவ் ஆக பார்க்க முடியாதவர்களுக்காக, இதன் தொகுக்கப்பட்ட வடிவம் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. புகை பிடிக்கும் காட்சிகள், முதல் வாரமே நாமினேஷன், எலிமினேஷன் என பரபரப்பை கூட்டி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். முதல் வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆக, இரண்டாவது வாரம் சுஜா வருணி வெளியேறினார். இந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் டபுள் எலிமினேஷனாக ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறுகிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் இனி பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க போவதில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்றும், கமலின் அதிகரித்த கட்சி மற்றும் சினிமா படப்பிடிபு பணிகள் காரணமாகவும் அவர் விலகல் முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் வழக்கமாக தொகுத்து வழங்குக் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அவரது விலகல் குறித்த பரபரப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் இதில் அடங்கும். ரம்யா கிருஷ்ணன், சிலம்பரசன், விஜய் சேதுபதி என பல பெயர்கள் அடிபடுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பிக்பாஸ் ரசிகர்கள் காத்துள்ளனர்.

x