கரோனா ஆபத்து மட்டுப்பட்ட நிலையில், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. மக்களும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர். திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கவும் தொடங்கியுள்ளனர். திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான நிலையிலும் ஓடிடியின் தாக்கம் குறையவில்லை. விக்ரம் நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ‘மகான்’ திரைப்படம் உணர்த்தும் சேதி இது.
கலவையான விமர்சனம் பெற்ற நிலையிலும், ‘மகான்’ கணிசமான எண்ணிக்கையில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. தீபிகா படுகோன் நடிப்பில் பிப்ரவரி 11-ல் வெளியான ‘கெஹராயியான்’ திரைப்படமும் விமர்சனங்களை மீறிப் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்த வாரமும் பல படைப்புகள் ஓடிடியில் வரிசை கட்டுகின்றன.
'டெம்ப்டேஷன் ஐலண்ட் சீசன் 2’ - வூட் செலக்ட்
2001-ல் வெளியாகி பெரும் வெற்றியையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்ற ரியாலிட்டி ஷோவின் அடுத்த சீசன் இது. ஒன்றாக இணைந்து வாழும் தம்பதி, ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலின் வலிமையையும் உண்மையையும் பரிசோதனைக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சி அது. ஓர் அழகான தீவுக்கு நான்கு தம்பதிகள் அனுப்பப்படுவார்கள்.
அங்கே அந்தத் தம்பதிகள் பிரிக்கப்பட்டு, ஆண்களும் பெண்களும் தனித்தனியாக இரு வேறு பகுதிகளில் தங்கவைக்கப்படுவார்கள். ஆண்கள் பகுதியில், திருமணம் ஆகாத 12 அழகான இளம்பெண்களும், பெண்கள் பகுதியில் திருமணம் ஆகாத 12 அழகான இளைஞர்களும் அவர்களுடன் சேர்ந்து வசிப்பார்கள். சபலத்தை வென்று சலனமின்றி வெளிவருபவரே, இந்தத் தொடரின் வெற்றியாளர்.
‘கிமி’ - அமேசான் ப்ரைம்
1954-ல் வெளியான ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘ரியர் விண்டோ’ திரைப்படத்தை நமக்கு நினைவூட்டும் திரைப்படம் இது. அகோராஃபோபியா (பொது இடங்களுக்குச் செல்வதில் அச்சம்) பாதிப்பைக் கொண்ட ஒரு தொழில்நுட்பப் பணியாளரின் கைகளில், ஒரு கொடூர வன்முறைக் குற்றத்துக்கான பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கின்றன.
அவர் புகார் அளிக்க முயலும்போது, மிரட்டலையும் எதிர்ப்பையும் சந்திக்கிறார். நீதியைத் தேடிச் செல்லுமாறு அவருடைய மனசாட்சி அவரை உந்தித்தள்ளுகிறது. ஆனால், அதற்கு முதலில் அவர் தன்னுடைய பயத்தை வெல்ல வேண்டும்; வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். அவர் பயத்தை வென்றாரா, பொதுவெளிக்கு வந்தாரா, நீதியைப் பெற்றாரா என்பன போன்ற கேள்விகளுக்கான பதிலை 90 நிமிடங்களில் இந்தத் திரைப்படம் நமக்குச் சொல்கிறது.
‘தி வொண்டர்ஃபுல் வின்டர் ஆஃப் மிக்கி மவுஸ்’ - டிஸ்னி + ஹாட்ஸ்டார்
டிஸ்னியின் பிரபலமான கதாபாத்திரமான மிக்கி மவுஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் மிகவும் கவர்ந்திழுக்கக்கூடியது. ஒரு குளிர்காலத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் பெருங்களிப்பு நிறைந்த சாகசப் பயணமே, இந்த அனிமேஷன் தொடர்.
பனியில் விளையாடும் கூஃபி, ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் மின்னி என இந்தத் தொடர், டிஸ்னியின் கிளாசிக் கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ளது. குழந்தைகளுடன் பெரியவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர் இது. நம்மை மீண்டும் குழந்தைகளாக மாற்றும் அதிசய ஆற்றல் கொண்ட மிக்கி மவுஸின் சாகசத்தைக் கண்டுகளியுங்கள்!
‘யங் வாலாண்டர் சீசன் 2’ - நெட்ஃப்ளிக்ஸ்
ஸ்வீடனில் நடக்கும் கதை இது. கர்ட் வாலண்டர், காவல் துறையிலிருந்து வெளியேறுகிறார். அதைத் தொடர்ந்து அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அவர் நிச்சயமின்மையைச் சிந்தனைத் தெளிவின்றி எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இந்நிலையில், சாமுவேல் ஓசி என்கிற புதிய கண்காணிப்பாளர் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
பெரிய குற்ற வழக்குகளைக் கையாளும் குற்றப்பிரிவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு வாலண்டருக்கு உருவாகிறது. வாலண்டர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். இரவு விடுதி ஒன்றுக்கு வெளியே, ஹிட் அண்ட் ரன் போன்று தோன்றும் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. அது புலி வால் பிடித்த கதையாக மாறுகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், யங் வாலண்டரும் பிடிக்கும்.
‘ஒன் ஆஃப் அஸ் இஸ் லையிங்’ - பீகாக்
‘ஒன் ஆஃப் அஸ் இஸ் லையிங்’ எனும் பெயரில் கேரன் எம். மெக்மானஸ் எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. 5 மாணவர்கள் காவலில் வைக்கப்படுகின்றனர். அவர்களில் நால்வர் மட்டுமே உயிருடன் வெளியேறுகிறார்கள். ஒருவர் இறந்துவிடுகிறார். ரகசியத்தைப் பகிரும் ஒரு செயலியில், மற்றவர்களைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த இருந்த நிலையில், அந்த மரணம் நிகழ்கிறது. தங்கள் நண்பரைக் கொல்வதற்கான காரணமும் நோக்கமும் அந்த நால்வருக்கும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று அழுத்தமாகக் கூறுகின்றனர். நால்வரில் ஒருவர் பொய் சொல்கிறார். அவர் யார் என்பது மர்மம். அந்த மர்மத்தை அவிழ்ப்பதே இந்தத் தொடர்.
‘மித்யா’ - ஜீ5
ரோஹன் சிப்பி இயக்கத்தில் உருவான சைக்கோ த்ரில்லர் தொடர் இது. கேத்ரின் கெல்லி, மோலி விண்ட்சர் ஆகியோர் நடிப்பில் 2019-ல் வெளியான ‘சீட் ‘ (Cheat) எனும் பிரிட்டிஷ் தொடரைத் தழுவி இது எடுக்கப்பட்டிருக்கிறது. ஹுமா குரேஷி நடிக்கும் இந்தத் தொடரில், பிரபல நடிகை பாக்யஸ்ரீயின் மகள் அவந்திகா தசானி அறிமுகமாகி இருக்கிறார்.
டார்ஜிலிங்கைக் களமாகக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் 6 பாகங்களைக் கொண்டிருக்கிறது. இந்தி இலக்கியப் பேராசிரியர் ஜூஹிக்கும் (குரேஷி), அவருடைய மாணவி ரியாவுக்கும் (அவந்திகா) இடையிலான முரண்பட்ட உறவை இந்தத் தொடர் பின்தொடர்ந்து செல்கிறது. இந்தத் தொடரில் பரம்பிரதா சட்டோபாத்யாய், ரஜித் கபூர், சமீர் சோனி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
7. ‘பெஸ்ட்செல்லர்’, அமேசான் ப்ரைம்
பாலிவுட்டின் முன்னாள் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்கரவர்த்தி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் சைக்கோ த்ரில்லர் தொடர் இது. புத்திசாலித்தனமும் திகிலும் மர்மமும் மிகுந்து இருக்கும் இந்தத் தொடர், நம்மை மனித இயல்பின் இருண்ட பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.
முகுல் அப்யங்கர் இயக்கியிருக்கும் இந்தத் தொடரில், மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ருதி ஹாசன், அர்ஜன் பாஜ்வா, கௌஹர் கான், சத்யஜித் துபே, சோனாலி குல்கர்னி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'தி மார்வெலஸ் மிசஸ் மைசல் சீசன் 4’ - அமேசான் ப்ரைம்
விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற தொடர் இது. இந்தத் தொடரில் நாயகியாக வாழ்ந்திருக்கும் ரேச்சல் ப்ரோஸ்னஹான், அதற்காகப் பல எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். 1950-களில், நியூயார்க்கின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மைசல் எனும் பெண்மணியின் சுயம் தேடும் முயற்சியே இந்தத் தொடர்.
அன்பான கணவர், இரண்டு குழந்தைகள், அழகான வீடு என நிறைவான வாழ்க்கையை வாழும் மைசல், தன்னுள் ஒளிந்திருக்கும் ஸ்டாண்ட்-அப் காமெடி திறனைக் கண்டறிகிறார். அதற்குப் பின், அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பல பெண்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இந்தத் தொடரின் வெற்றிக்கும் தொடர்ச்சிக்கும் அதுவே காரணம்.