‘மகான்' திரைப்படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'மகான்' திரைப்படத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. கரோனா சூழல் காரணமாக இந்த திரைப்படம் பிப்.10 அன்று நேரடி ஓடிடி வெளியீடாக அமேசான் தளத்தில் வெளியானது.

காந்தியின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவரான காந்தி மகான், ஒருநாள் தனது விருப்பத்துக்கு ஏற்றாற்போல வாழ, அது மனைவி மற்றும் மகனை அவரிடம் இருந்து பிரிக்கிறது. இதன் பின்பு தனது பால்ய கால நண்பனான சத்யவானுடன் இணைந்து சரக்கு சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளியாக மாறுகிறார் மகான். பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் தாதா போலீஸாக திரும்பி வந்து, அப்பாவின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்க, கடைசியில் என்ன நடந்தது என்பதுதான் மகான் திரைப்படம்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், கார்த்திக் சுப்பராஜூக்கு இயக்குநராக நல்ல கம்பேக் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் விக்ரமின் நடிப்புக்கு தீனி போடும் வகையிலான கதையாகவும் இது அமைந்துள்ளது என ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'மகான்' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, தனது வாழ்த்துகளை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு தெரிவித்து இருக்கிறார். இது குறித்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்திருக்கிறார். '‘அருமையான படம், சூப்பரான நடிப்பு; பிரிலியண்ட் என தலைவர் தெரிவித்தார். ஆமாம், அவருக்கு 'மகான்' பிடித்திருக்கிறது. தொலைபேசியில் அழைத்து பாராட்டியதற்கு நன்றி தலைவா! எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என அந்த ட்வீட்டில் தனது மகிழ்ச்சியை கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் நேற்று வெளியான ரஜினிகாந்தின் 169-வது படம் குறித்தான அறிவிப்புக்கு, நெல்சன் மற்றும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளையும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இதே சன் பிக்சர்ஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினியை வைத்து 'பேட்ட' திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

x