வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி; தடைபட்ட லைவ் ஸ்ட்ரீம்: பிக் பாஸ் அல்டிமேட்டில் நடந்தது என்ன?


நடிகர் கமல்ஹாசன்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மீண்டும் லைவ் ஸ்ட்ரீமில் தடைபட்டது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. முதல் வாரமே சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியதும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் 24*7 என லைவ் ஸ்ட்ரீமிங்காக டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. புகை பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பானது, பத்திரிகையாளர்கள் vs பிரபலங்கள் பிரஸ் மீட் டாஸ்க், வனிதா காபியை ஒளித்துவைத்து பிரச்சினை ஆனது, முதல் வாரமே நாமினேஷன் என பார்வையாளர்களுக்கு தினமும் கன்டென்ட் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட்.

சுரேஷ் சக்ரவர்த்தி

அந்த வகையில் நேற்று நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், “முதல் வாரம் என்பதால் நிச்சயம் எலிமினேஷன் இருக்காது என்பது போன்ற பேச்சை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் அப்படி கிடையாது. நிச்சயம் எலிமினேஷன் இருக்கும்” என சொல்லி இருக்கிறார். அதன்படி குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருக்கிறார். கடந்த பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டபோதே நன்றாக விளையாடியும் குறைந்த நாட்களிலேயே வெளியேறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. இப்போது அதை விட குறைந்த நாட்களில் அதாவது விளையாட ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே வெளியேறி இருக்கிறார்.

நன்றாக விளையாடிவந்த சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது வாய்ப்பிலும் சீக்கிரமே வெளியேறிவிட்டார் என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

கடைசி நேரத்தில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற போவது சுரேஷ் சக்ரவர்த்தியா அல்லது அபிநய்யா என்ற குழப்பம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்கள் விளையாட வேண்டும் என்பதற்காகவும் மக்கள் சுரேஷ் சக்ரவர்த்தியை வெளியேற்றி இருக்கலாம் என்ற சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, சுரேஷ் சக்ரவர்த்தி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு 'நான் அபிநய்யைவிட குறைந்த வாக்குகள் பெற்றேனா? நான் வெளியேற்றப்பட்டது சரியில்லை' என்பது போன்ற ட்வீட் ஒன்று பிக் பாஸ் அல்டிமேட் அணியை டேக் செய்து போடப்பட்டிருந்தது. எனினும், “இது என்னுடைய கணக்கு இல்லை. போலியானது” என சுரேஷ் சக்ரவர்த்தி தெளிவுபடுத்தி இருந்தார்.

உள்ளே வனிதா, பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி இவர்கள் மூவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் வாரத்தில் வெளியேறினாலும் எனக்குக் கவலை இல்லை என்று உள்ளே ஒருமுறை சுரேஷ் சக்ரவர்த்தி கூறியிருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்டின் லைவ் ஸ்ட்ரீமும் நேற்று திடீரென தடைபட்டது. இதே போல முன்பு ஒரு முறை பிக் பாஸ் லைவ் தடைப்பட்டது. வனிதா vs அபிராமி சண்டையினால் லைவ் ஸ்ட்ரீம் தடைபட்டதோ என ரசிகர்கள் குழம்பினர். எனினும், தொழில்நுட்பக் கோளாறுதான் அதற்குக் காரணம் என பிக் பாஸ் அணி தெளிவுபடுத்தியது.

தற்போது மீண்டும் லைவ் ஸ்ட்ரீம் தடைபட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பாகப் பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கமல்ஹாசன் இன்று மாலை கலந்துகொள்வதில் இருந்து லைவ் ஸ்ட்ரீம் மீண்டும் தொடங்கும் என அறிவித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இதுதொடர்பாக எழுந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

x