நிரூப் - அபிராமி காதல்; வைல்ட் கார்டில் நுழைகிறாரா யாஷிகா?


யாஷிகா ஆனந்த்

நிரூப்- அபிராமி காதல், நிரூப்புடன் எப்போது திருமணம் ஆகிய கேள்விகளுக்கு நடிகை யாஷிகா பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் ஓடிடியின் தமிழ் வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் 24x7 என தற்போது லைவ் ஸ்ட்ரீமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் விளையாட்டின் சூட்சுமம் தெரிந்த, நிகழ்ச்சிக்கு காரசாரமான கன்டென்ட் கொடுப்பவர்களாக, கடந்த 5 சீசன்களில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தாடி பாலாஜி, ஜூலி, வனிதா, அபிராமி, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, சுருதி, நிரூப், தாமரை உட்பட மொத்தம் 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருவதுடன் அவ்வப்போது ட்ரெண்டிங்கிலும் நீடிக்கிறது.

அந்த வகையில் முதல் வார நாமினேஷனுக்கு யார் ஆளாகப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் காதல் விவகாரம் ஒன்றும் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. நிரூப் - அபிராமி ஆகியோர் இதற்கு முன்பாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக, பத்திரிக்கையாளர்கள் vs செலிபிரிட்டி டாஸ்க்கின்போது அவர்களே போட்டு உடைத்தார்கள்.

'ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்த பின்னர், இருவர் வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தது. அதனால் அவை குறித்து பேசுவதில், ஒரு தயக்கமும் நீடித்தது. மற்றபடி நாங்கள் எப்போதும் நண்பர்கள்தான்' என்றும் நிரூப் - அபிராமி சொல்லியிருந்தார்கள்.

இப்போது பிக்பாஸ் ரசிகர்கள் பலரும், நிரூப்- அபிராமி காதல் குறித்து யாஷிகாவிடம் அவரது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா, 'அவர்கள் இருவரும் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்ததும், பிரிந்ததும் மட்டுமல்ல; பிக்பாஸ் அல்டிமேட்டில் ஒரே வீட்டில் தங்கப் போகிறார்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் இருவரும் இதை சமாளிக்கும் அளவுக்கு முதிர்ச்சியான நபர்கள்தான். அதனால் இது குறித்து நான் தனியாக கருத்து சொல்ல எதுவும் இல்லை. வாழு, வாழ விடு' என கூறியிருக்கிறார்.

யாஷிகாவுடன் நிரூப்

அதே போல, நிரூப்புடன் திருமணம் எப்போது எனவும் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு யாஷிகா, ’நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து மெதுவாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். பிரிவுக்கு பின்னரும் இருவரும் நல்ல நண்பர்கள்தான். அதுமட்டுமல்லாமல், இப்போதைக்கு திருமணம் குறித்தான எந்தவொரு எண்ணமும் எனக்கு இல்லை' என பதிலளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நேரிட்ட எதிர்பாரா விபத்து ஒன்றில் படுகாயமடைந்த யாஷிகா, மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்து முழுமையாக மீண்டுள்ளார். பழையபடி சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாகவும் உள்ளார். இப்போது நிரூப்- அபிராமி இருவரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் உள்ளே இருப்பதால், யாஷிகாவும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தால், ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் விருப்பத்தை பிக்பாஸ் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

x