சாலையில் செல்வோரை அலறவிட்ட பள்ளிப் பேருந்து!


சாலையின் குறுக்கும் மறுக்குமாக ஒரு பள்ளிப் பேருந்து விரைகிறது. பேருந்தின் மேற்பரப்பு எங்கும் ரத்த தீற்றலாக இருக்க, பேருந்தினுள் ஏதோ விபரீதம் நடப்பதும், உள்ளிருந்து உதவி கேட்டு மாணவர்கள் அலறுவதுமாக, அந்தப் பேருந்து சடுதியில் பார்வையிலிருந்து மறைந்து போகிறது. உற்று கவனிப்பவர்களுக்கு மட்டுமே அது ஒரு விளம்பரம் எனத் தெரியும். பயத்தில் உறைந்தவர்களால், விளம்பரத்தை ஏற்பாடு செய்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்துள்ளன. இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது தாய்லாந்து தேசத்தில்.

திகில் திரைப்படங்களில் ஸோம்பி வகையறா பிரபலமானது. குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மனிதர்கள், ரத்தக்காட்டேரி பாணியில் கண்ணில்படும் மனிதர்களை எல்லாம் கடித்து வைப்பார்கள். கடிபட்டதில் வைரஸ் தொற்றும் என்பதால், அவர்களும் புதிய ஸோம்பி ஆவார்கள். இப்படி ஸோம்பிகளின் எண்ணிக்கை அதிகமாக, அவர்கள் மத்தியில் கதையின் பிரதான பாத்திரங்கள் பிழைத்தார்களா என்பதை திரையெங்கும் ரத்தம் தெறிக்கச் சொல்வதே ஸோம்பி கதையின் பாணியாக இருக்கும்.

அந்த வகையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், ’ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட்’ என்ற புதிய ஸோம்பி வலைத்தொடரை வெளியிட்டுள்ளது. ஒரு பள்ளிக்கூடம் ஸோம்பிகள் கூடாரமாவதுதான் கதை. வலைத்தொடருக்கு விளம்பரம் செய்வதற்காக, தாய்லாந்தின் நெட்ஃபிளிக்ஸ் பிரிவு விசித்திரமான ஏற்பாட்டை செய்தது. அதன்படி, பள்ளிகள் பயன்பாட்டுக்கே உரிய மஞ்சள் பேருந்தில், அதன் வெளிப்பரப்பெங்கும் ரத்தத் தீற்றலாக்கியது. பேருந்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எல்இடி திரைகளை பொருத்தி, அதில் சில 3டி காட்சிகளை ஓடவிட்டது. அந்த காட்சிகளைப் பார்த்தால் அசப்பில், பள்ளிப் பேருந்தினுள் ஸோம்பிகள் புகுந்து அனைவரையும் வேட்டையாடுவதாகவும், அதற்கு பயந்த மாணவர், ஆசிரியர்கள் சாலையில் செல்வோரிடம் இறைஞ்சுவதாகவும் தெரியும்.

தாய்லாந்து சாலைகளில் இந்தப் பேருந்து ஓட ஆரம்பித்தபோது தொடக்க விநாடிகளில் திகிலும், அதன் பின்னரே விளம்பரம் என்று புரிந்தவர்களின் ரசிப்புமாக வரவேற்பு பெற்றது. ஆனால் குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகளை இந்தப் பேருந்து அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்த விளம்பரத்துக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்போரும் அதிகமாக, அனைத்தையும் தனது விளம்பரக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். முறைப்படி அனுமதி பெற்று இந்த விளம்பரத்தை மேற்கொள்வதால், அடுத்தடுத்த சாலைகளில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தாய்லாந்து திகில் பேருந்து.

x