பூதகாலம் (மலையாளம்)
மகனின் பால்ய வயதில் தந்தை இறந்துபோக, ஆசிரியையான தாய் அவனைப் பொத்தி வளர்க்கிறாள். இருவர் மட்டுமே தனித்திருக்கும் அவர்களது வீட்டுக்குள் அமானுஷ்யமும், மனநல பாதிப்பும் ஊடுருவுகிறது. படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் மகன், வேலை நிமித்தம் தன்னைப் பிரிவதை தாய் விரும்பவில்லை. மன அழுத்தத்தில் தவிக்கும் தாயார் தன்னை சதா கண்காணித்து முடக்கி வைத்திருப்பதை மகன் விரும்பவில்லை. இவர்களுக்கு இடையே நிகழும் போராட்ட பந்தமும், எவரும் எதிர்பாராத திகில் சம்பவங்கள் அந்த வீட்டில் அரங்கேறுவதும், அதிலிருந்து இருவரும் மீண்டார்களா என்பதுமே, பூதகாலம் திரைப்படம். ஷேன் நிகாம், ரேவதி, அதிரா படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராகுல் சதாசிவம் இயக்கியுள்ள பூதகாலம் திரைப்படம், ஜன.21 அன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
அன்பாஸ்ட்- நயா சஃபர் (இந்தி - வலைத்தொடர்)
அமேசான் ப்ரைம் வீடியோவில் கரோனா பரவல் காலத்தை மையமாகக் கொண்டு, ’புத்தம் புது காலை’ மற்றும் ’புத்தம் புது காலை விடியாதா’ என்ற 2 ஆந்தாலஜி திரைப்படங்கள் தமிழில் வெளியாயின. அதே பாணியில் பெருந்தொற்றின் முதல் அலை காலத்தில் இந்தியில் வெளியான ஆந்தாலஜி ‘அன்பாஸ்ட்’. கரோனா காலத்து பொதுமுடக்கம் சார்ந்த கதைகளை இந்த ஆந்தாலஜி பேசியது. அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதன் 2-வது பாகத்தை வலைத்தொடராக எடுத்துள்ளனர்.
பெருந்தொற்றின் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த ’அன்பாஸ்ட்- நயா சஃபார்’(Unpaused: Naya Safar) வலைத்தொடரின் முதல் சீஸனில், நியூ நார்மலுக்கு பழகிப்போன உறவுகள் மத்தியில் தெறிக்கும் தடுமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 5 கதைகளை நாக்ராஜ் மஞ்சுளே, அஸ்வினி சித்வானி, சாஜத் சௌடகர், பரம்வீர் சிங், ஆனந்த் மேனன் ஆகிய 5 பாலிவுட் இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். குல்ஷன் தேவைய்யா, சுமீத் வியாஸ், சயாமி கெர், அபிஷேக் பானர்ஜி, இஷ்வாக் சிங், கீதிகா வித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜன.21 அன்று இது வெளியாகி உள்ளது.
முதல் நீ முடிவும் நீ (தமிழ்)
நேரடி ஓடிடி வெளியீடாக ஜீ5 தளத்தில் ஜன.21 அன்று வெளியாகி இருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘முதல் நீ முடிவும் நீ’. நடிகராக அறிமுகமான தர்புகா சிவா, ’கிடாரி’, ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர், ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்கு இசையும் அவரே!
சென்னையில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில், பதின்மத்தில் திளைக்கும் பள்ளி மாணவர்கள் பார்வையில் விரியும் கதை, பின்னர் வேறொரு தளத்தில் இருந்தவாறு வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அலசுகிறது. சர்வதேச திரைவிழாக்களில் விருதுபெற்ற இந்தத் திரைப்படத்தில், கிஷன் தாஸ், பூர்வா ரகுநாத், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தி ராயல் ட்ரீட்மென்ட் (ஆங்கிலம்)
இத்தாலிய -அமெரிக்க அழகுக் கலவையான இஸபெல்லா, நியூயார்க் நகரில் தாயுடன் இணைந்து அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் இஸபெல்லாவுக்கு, அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது. ராஜ குடும்பத்தின் இளவரசர் தாமஸின் திருமண வைபவத்தை முன்னிட்டு, அவருக்கு சிகை அலங்காரம் மேற்கொள்ள பெருந்தொகை ஒப்பந்தத்தில் இஸபெல்லா அழைக்கப்படுகிறார்.
அரண்மனைக்கு வருகை தரும் இஸபெல்லாவின் தனித்துவ குணநலன்களும் அழகும் இளவரசரைக் கட்டிப்போடுகிறது. காதலும், நகைச்சுவையும் கலந்த எளிதில் ஊகிக்கக்கூடிய திரைக்கதையும், எதிர்பார்த்த மகிழ்ச்சியான முடிவும்தான் ’தி ராயல் ட்ரீட்மென்ட்’ திரைப்படத்தின் கதை. ஜன.20 அன்று வெளியான நெட்ஃப்ளிக்ஸின் இந்த பிரத்யேக திரைப்படத்தை, தமிழ் டப்பிங்கிலும் ரசிக்கலாம். ரிக் ஜாகோப்சன் இயக்கி இருக்கும் இப்படத்தில், லாரா மரனோ, மெனா மசௌத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அஸ் வி சீ இட் (ஆங்கில வலைத்தொடர்)
இருபதுகளில் வாழும் 2 ஆண், ஒரு பெண் என 3 நண்பர்களை, அவர்களது வாழ்விடமும், ஆட்டிச பாதிப்பும் ஒன்றிணைக்கிறது. வயதொத்த பிறரைப்போலவே வேலை தேடுவது, புதிய நட்பு வட்டத்தை உருவாக்குவது, காதல் கொள்வது என இந்த மூவருக்கும் கனவுகள் எழுகின்றன. இதற்கிடையே உடல்நலன் சார்ந்தும், குடும்பப் பின்னணியிலும் அவர்களுக்கான பிரத்யேக பிரச்சினைகள் எழுகின்றன. இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டார்களா, தங்கள் கனவுகளைக் கண்டடைந்தார்களா என்பதே ’அஸ் வி சீ இட்’(As We See It) வலைத்தொடர்.
ஜன.21 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில், 8 அத்தியாயங்கள் கொண்ட இந்த வலைத்தொடரின் முதல் சீஸன் வெளியாகி உள்ளது. சிறப்புக் குழந்தைகளாக வளர்வோரின், இருபதுகளின் வாழ்க்கையையும், உலகத்துடனான அவர்களின் ஊடாடலையும் இந்த வலைத்தொடர் சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது.
திரையரங்கிலிருந்து ஓடிடி தளங்களுக்கு
கரோனா பரவல் காரணமாக திரையரங்கில் வெளியான சூட்டில் ஓடிடி தளங்களில் தஞ்சமடைந்திருக்கும் சில திரைப்படங்களும் இந்த வாரம் கவனம் ஈர்க்கின்றன. ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்யாபாரதி உள்ளிட்டோர் நடிப்பில் சதீஷ் செல்வக்குமார் இயக்கிய ’பேச்சிலர்’ தமிழ்த் திரைப்படம் சோனி லைவ் தளத்தில் காணக்கிடைக்கிறது.
பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஷாம்னா காசிம் உள்ளிட்டோர் நடித்த ’அகண்டா’ தெலுங்கு திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். ’ஷவா நி கிர்தாரி லால்’ என்ற நகைச்சுவை பஞ்சாபி திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். ’முனிச்: தி எட்ஜ் ஆஃப் வார்’(Munich: The Edge of War) என்ற ஜெர்மன் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். ஹிட்லர் காலத்து ஜெர்மனியில், செக்கோஸ்லோவாகியா தேசத்துக்குள் நாஜிக்கள் ஊடுருவ தயாரானதன் பின்னணியில், அமைதிக்காக அங்கு களமாடிய ஒரு பிரிட்டீஷ் உளவாளியின் சாகசத்தை முனிச்: தி எட்ஜ் ஆஃப் வார் திரைப்படம் பேசுகிறது.