அகன்ற திரை வெற்றியை அடுத்து ஓடிடியில் களமிறங்கும் ‘அகண்டா’


அகண்டாவில் பாலகிருஷ்ணா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ திரைப்படம், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2 அன்று வெளியான ‘அகண்டா’ திரைப்படம் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வரிசையில் சேர்ந்திருக்கிறது. இயக்குநர் போயபதி சீனு - பாலகிருஷ்ணா கூட்டணியில், லெஜெண்ட், சிம்ஹா ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் அகண்டா ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது. ஆந்திரா, தெலங்கனாவுக்கு அப்பால் வெளிநாடுகளில் திரையிட்ட இடங்களில் எல்லாம், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அகண்டாவை வெற்றிப்படமாக்கி உள்ளனர்.

வழக்கமாக ஆண்டுதோறும் சங்கராந்தி வெளியீடுகளில் பாலகிருஷ்ணாவின் திரைப்படம் நிச்சயம் இடம்பெறும். இம்முறை ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற பிரமாண்ட திரைப்படங்கள் போட்டியில் குதித்ததால், பாலகிருஷ்ணாவின் அகண்டா முன்கூட்டியே வெளியானது. ஆனால் கரோனா காரணமாக இந்த 2 படங்களும் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ள, அகண்டா திரைப்படம் வழக்கம்போலவே சங்கராந்திக்கும் வெற்றிப்படமாக மாறிப்போனது. பாலகிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓடிடி வெளியீடாக அகண்டா

இதற்கிடையே, ஒன்றரை மாதத்துக்கும் மேலாக திரையரங்குகளில் வசூலில் சோடை போகாதிருக்கும் அகண்டாவின் லாபத்தை, கூடுதலாக அறுவடை செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி ஓடிடி வெளியீட்டையும் அறிவித்திருக்கிறார்கள்.

அகண்டா திரைப்படத்தின் ஒடிடி உரிமையை ’டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளம் ஏற்கனவே கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது அதற்கான ஓடிடி ரிலீஸ் தினமாக நாளை மறுநாள்(ஜன.21) அறிவிக்கப்பட்டுள்ளது.

x