ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே உரித்தான சூப்பர் ஹீரோ கதைக்களத்தை, நம்மூர் சினிமாக்களில் கொண்டுவரும் முயற்சிகள் இதுவரை இந்திய சினிமாக்களில் பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. பாலிவுட்டில் ‘ரா-ஒன்’, ‘க்ரிஷ்’, ‘சூப்பர் சிங்’, ‘பவேஷ் ஜோஷி சூப்பர் ஹீரோ’ போன்ற படங்களையும் தமிழில் ‘முகமூடி’, ‘ஹீரோ’ போன்ற படங்களையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
நம்மூரில் முயன்று பார்க்கப்பட்ட இந்த வகை சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் பெரும்பாலும் அவ்வளவாய் ஜொலிக்கவில்லை. ஹாலிவுட்டைப் பார்த்து அப்பட்டமாகக் காப்பி அடிப்பதும் , நம்மூருக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்தல் இல்லாமலும் போனதே இதற்குக் காரணம். இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு கச்சிதமான உள்ளூர் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மின்னல் முரளி’. பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் வெளியாகியுள்ளது இப்படம்.
கிராமத்து சூப்பர் ஹீரோ :
கேரளாவின் குறுக்கன்முலா கிராமத்தில் வசிக்கும் இளைஞன் ஜெய்சன் (டொவினோ தாமஸ்). அமெரிக்கா சென்று அங்கு தையல்காரராகப் பணிபுரிந்து, உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகளும் தன்னுடைய காதலியுமான பின்ஸியை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவில் இருப்பார் ஜெய்சன். அதே ஊரில் டீக்கடையில் எடுபிடி வேலை செய்பவர் ஷிபு (குரு சோமசுந்தரம்). தன்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த உஷா மீதான காதலை 28 வருடங்கள் கழித்து வெளிப்படுத்த ஷிபுவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இப்படி எளிய கனவுகளுடன் இருக்கும் இவர்களது வாழ்க்கையில், 700 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இயற்கை நிகழ்வு ஒன்று குறுக்கிடும். அந்த இயற்கை நிகழ்வின்போது இருவரும் மின்னலால் தாக்கப்படுவார்கள். அதன் மூலம் இருவருக்கும் சூப்பர் பவர் கிடைக்கும்.
தனக்குக் கிடைத்த சூப்பர் பவரைக் கொண்டு நல்லது செய்ய ஜெய்சன், மின்னல் முரளி என்ற அவதாரம் எடுப்பார். அதேசமயம் தனது சூப்பர் பவரைக் கொண்டு சுயநலத்துடன் வில்லத்தனம் செய்வார் ஷிபு. மேலும், தான் செய்யும் தீய விஷயங்களுக்கு மின்னல் முரளி பெயரைப் பயன்படுத்த ஆரம்பிப்பார் ஷிபு. தன் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் மர்ம மனிதனை மின்னல் முரளி கண்டுபிடித்தாரா, தன்னை துரத்தும் போலீஸிடம் இருந்து தப்பினாரா, ஜெய்சன் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றாரா, ஷிபு தனது பால்ய சிநேகிதி உஷாவுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.
ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களைக் கரைத்து குடித்திருக்கும் நவீன கால ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள் கதாசிரியர்களான அருண் அனிருதனும், ஜஸ்டின் மேத்யூவும். திரைக்கதையின் முதல் பாதி முழுக்க ஜெய்சனும் ஷிபுவும் தங்களுடைய சூப்பர் ஹீரோ பவரை எப்படிப் பழகுகிறார்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் சிக்கல்கள் என்ன என்று திரைக்கதையை நிதானமாகக் கட்டமைத்திருப்பது, இறுதிக்காட்சியில் இருவரும் தங்களுடைய உச்சபட்ச சக்தியை வெளிப்படுத்தும்போது கேள்வி எதுவும் கேட்காமல் நம்மை அக்காட்சியை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
சூப்பர் ஹீரோ என்றவுடன் திரைக்கதையிலும் கதாபாத்திரங்களிலும் பிரம்மாண்டத்தைத் திணிக்காமல் இறுதிவரை ஜெய்சனை சாமானியனாகக் காட்டியிருப்பது திரைக்கதைக்குப் பெரும்பலம். மின்னல் முரளி தனக்கான பிரத்தியேகமான சூப்பர்ஹீரோ உடையை இறுதிக் காட்சியில் மட்டும் பயன்படுத்துவது, படம் முழுக்க சூப்பர் ஹீரோ வேட்டி, சட்டையுடன் முகத்தில் துண்டைச் சுற்றிக்கொண்டு சண்டையிடுவது எல்லாம் திரைக்கதை ஆச்சரியம். ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படம் போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ‘மின்னல் முரளி’ படத்தை அணுகுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இப்படம் இதுவரை சொல்லப்படாத கிராமத்து சூப்பர் ஹீரோ திரைக்கதை. அந்த அளவில் இத்திரைப்படம் மிகக் கச்சிதமாகத் தனது பங்கைச் செய்துள்ளது.
முதல் பாதி சற்று நிதானமாகச் செல்வதாலும் அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று சில இடங்களில் நம்மால் கணித்துவிட முடிவதாலும் திரைக்கதையில் ஆங்காங்கே சுவாரஸ்யம் குன்றி விடுகிறது.
குரு சோமசுந்தரம்:
மின்னல் முரளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டொவினோ தாமஸை விட, ஷிபு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது நடிப்பால் நம்மைக் கவர்ந்து விடுகிறார். ஒரு நல்ல சூப்பர் ஹீரோ உருவாக வேண்டுமென்றால் ஒரு நல்ல சூப்பர் வில்லன் தேவை என்பது திரைக்கதையின் அடிப்படை விதி. அவ்வகையில் மின்னல் முரளிக்குச் சரியான போட்டியாக ஷிபு கதாபாத்திரத்தை வார்த்து எடுத்திருக்கிறார்கள் ‘மின்னல் முரளி’ படக்குழுவினர்.
தனது பால்ய கால சிநேகிதியான உஷாவைக் கண்டு மருகும் காட்சிகளிலும், உஷாவின் அண்ணன் தன்னை அவமானப்படுத்தும்போது கூனிக் குறுகும் காட்சியிலும், சூப்பர் பவர் கிடைத்த பிறகு அதை வைத்து வில்லத்தனம் செய்யும் காட்சிகளிலும் குரு சோமசுந்தரத்தின் திரை வீச்சு அசர வைக்கிறது. இப்படத்தைப் பார்க்கும்போது குரு சோமசுந்தரத்தைத் தமிழ் சினிமா ஏன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மேலும், மின்னல் முரளியைப் பிடிக்க முயற்சிக்கும் போலீஸார், ஜெய்சனுக்கு சூப்பர் ஹீரோக்களை பற்றிச் சொல்லித்தரும் அவருடைய அக்கா மகன் போன்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையில் நகைச்சுவைக்குப் பஞ்சத்தைப் போக்குகின்றன.
டப்பிங் சிக்கல்:
ஆறு மொழிகளில் வெளியாகி இருந்தாலும் டப்பிங்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. ஒரு கதாபாத்திரம் பேசும் வசனமே அக்கதாபாத்திரத்தின் மீதான பிம்பத்தை நம் மனதில் கட்டமைக்கும் என்பதைப் படக்குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இறுதிக்காட்சியில் மலையாளத்தில் மின்னல் முரளி பேசும்போது, “இந்த ஊரின் மக்களைக் காக்கும் காவலனாக (ரட்சகன்) என்றும் இருப்பேன்” என்ற வசனத்தைத் தமிழில், “இந்த ஊரின் மக்களைக் காக்கும் கடவுளாக என்றும் இருப்பேன்” என்று மொழிமாற்றம் செய்துள்ளார்கள்.
இந்த வசனம் மின்னல் முரளியின் அடையாளமான எளிய மனப்பான்மையைச் சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே, ‘மின்னல் முரளி’ யை மலையாளத்தில் ஆங்கில சப்டைட்டில் உதவியுடன் பார்ப்பதே சிறந்த திரை அனுபவத்துக்கான வழி.