2001-ல் நடக்கும் கதையில் மிகவும் அப்பாவியான ஃபூல் குமாரியை (நிதான்ஷி கோயல்) தீபக் குமார் (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ்) கரம்பிடிக்கிறார். திருமணம் முடிந்து ரயிலில் இருவரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ரயிலில் அவர்களுக்கு அருகில் மற்றொரு திருமண ஜோடியும் அமர்ந்திருக்கிறார்கள்.
கிட்டதட்ட இரண்டு மணப்பெண்களும் ஒரேமாதிரியான நிறம் கொண்ட முக்காடு அணிந்து முகத்தை மறைத்திருக்கிறார்கள். ஊர் வந்ததும் அவசரத்தில் ரயிலில் இருந்து இறக்கும் தீபக் குமார் தவறான மணப்பெண்ணை அழைத்து வந்துவிடுகிறார். இறுதியில் இருவரும் அவரவர் கணவர்களுடன் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை. படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
“முட்டாளாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல, ஆனால் ஒருவரின் அறியாமையை நினைத்து பெருமைப்படுவது அவமானம்”, “உன் மேல அன்பு வைச்சிருக்குறவங்களுக்கு அடிக்க உரிமை இருக்குன்னு கணவர் சொன்னாரு. அதான் நானும் அந்த உரிமையை பயன்படுத்துனேன்”, “மரியாதையான பெண் என்பது மிகப்பெரிய மோசடியான வார்த்தை” உள்ளிட்ட வசனங்கள் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன.
முக்காடு அணியும் சடங்கு, அதனால் ஏற்படும் பாதிப்பு, வரதட்சணையை கோரும் ஆண் வீட்டார், பிற்போக்குதனங்களை சுமந்து பழங்கால சடங்குகளை பின்பற்றும் குடும்பங்கள், வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் வட இந்திய கிராமங்கள், அப்படியான நிலப்பகுதியில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பெண் ஒருவர் பேசுவது உள்ளிட்ட காட்சிகள் கவனம் பெறுகின்றன.
அனைத்து மதத்திலும் உள்ள பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒரு காட்சியில் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். அதேபோல பெண்கள் கூடி பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஒன்றில், “எனக்கு பிடிச்ச சாப்பாடு, என் கணவருக்கு பிடிக்காதுங்குறதால, இப்போ எனக்கு என்ன பிடிக்கும் அப்டிங்குறதே மறந்துட்டேன்” போன்ற வசனங்கள் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. என்கேஜிங்காக செல்லும் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் தேவைக்கு ஏற்ப முக்கியத்துவத்துடன் கையாளப்பட்டிருப்பது பலம்.
ஹீரோயிசம், வன்முறை என பார்த்து வெதும்பி, அயற்சியிலிருக்கும் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.