பாலியல் சீண்டல்களுக்கு எதிரான பதிலா ‘சித்திரைச் செவ்வானம்’?


தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டரான ‘ஸ்டன்ட் சில்வா’ இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘சித்திரைச் செவ்வானம்’.

ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதையை, இயக்குநர் விஜய் எழுதியுள்ளார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம், பெண்கள் மீதான வன்முறையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நான் - லீனியர் திரைக்கதை:

போக்குவரத்து வசதியே இல்லாத சிறு கிராமத்தில் வாழ்ந்து வருவார்கள் முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி) மற்றும் அவரது மனைவி. மின் விபத்து ஏற்பட்டு சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் தனது மனைவி இறந்துவிட, தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை டாக்டராக்க வேண்டும் என்று முடிவெடுப்பார் முத்துப்பாண்டி. அதற்காக நீட் எக்ஸாம் பயிற்சிக்காக பக்கத்தில் இருக்கும் ஊரில் போய் தங்கிப் படிப்பார் ஐஸ்வர்யா.

அங்கே, அவர் குளிக்கும் போது எடுத்த வீடியோவை சில இளைஞர்கள் பரப்பியதால் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போவார். இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடக்கும். சமுத்திரக்கனியும் ஒருபுறம் தன் மகள் காணாமல் போனதைப் பற்றி விசாரிப்பார். இதுதான் சித்திரைச் செவ்வானம் திரைப்படத்தின் திரைக்கதை.

இப்படி எளிமையான ஒரு கதையை நான்-லீனியர் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் அடுக்கிப் பரபரப்பாகக் கதைச் சொல்ல முயன்று, அறிமுக இயக்குநராகத் தடுமாறியிருக்கிறார் சில்வா. பல இடங்களில் காட்சிகள் முன்னும் பின்னும் வருவது பரபரப்பை தருவதற்குப் பதிலாக சோர்வை உண்டாக்குகிறது. படத்தின் ஒரே ஆறுதல், சமுத்திரக்கனி மற்றும் பூஜா கண்ணன் இடையில் இருக்கும் அப்பா மகள் காட்சிகள்தான். எளிமையான நடிப்பில் இருவருமே ஸ்கோர் செய்கிறார்கள். ரீமா கல்லிங்கல் விரைப்பான போலீஸ் அதிகாரியாக தன் பங்கைச் சரியாக செய்திருக்கிறார்.

இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் பல கதாபாத்திரங்கள் வந்து போகின்றனர். ஆனால், ஒரு சிலரைத்தவிர யாரும் மனதில் தங்கவில்லை. பல காட்சிகள் ஏன் நடக்கின்றன என்று புரியவே இல்லை. படத்தின் இறுதியிலும் அந்தக் காட்சிகளை சரியான இடத்தில் வந்து இயக்குநர் இணைக்கத் தவறியதால், படம் முடிந்தும் திரைக்கதையில் பல கேள்விகள் பதில் இல்லாமல் தொக்கி நிற்கின்றன.

பொள்ளாச்சி பாலியல் சர்ச்சை:

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாகக்கொண்டு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை சொல்ல வேண்டுமென்று சிரத்தை எடுத்து உள்ளார் ஸ்டன்ட் சில்வா. ஆனால், அதை எந்த இடத்திலும் சரியாகச் சொல்லவில்லை. ஒரு பெண்ணின் நிர்வாணமே, அவள் உயிர் வாழலாமா வேண்டாமா என்று நிர்ணயிக்கும் ஒரு காரணி என்று தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக சொல்லி வரும் அதே பழமைவாத கருத்தைத் தான் இத்திரைப்படமும் சொல்கிறது.

தன் உடலை மற்றவர்கள் பார்த்துவிட்டாலே உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும், பெண்ணின் உடலில் மட்டுமே அவருடைய மரியாதை எடை போடப்படுகிறது என்ற கருத்தை இத்திரைப்படம் தன்னையுமறியாமல் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. படம் முடிகையில் ‘பெண்ணையும் மண்ணையும் நம் கண்போல் காப்போம்’ என்று பெருமையாக டைட்டில் கார்டு போட்டிருக்கிறார்கள்.

உயிரற்ற, விலை கொடுத்து வாங்கக் கூடிய மண்ணுடன் பெண்ணை இன்னும் நாம் எத்தனை காலம் ஒப்பிட்டுப் பேசப்போகிறோம்? குற்றம்சாட்டும் நம் விரல்கள் பெண்ணின் உடலை அவர்களுக்கு எதிரான பகடைக்காயாக பயன்படுத்துபவர்களையும், அவர்களின் வளர்ப்பு முறையில் இருக்கும் சிக்கலையும், சமூகத்தின் பொதுப்புத்தியையும் நோக்கி அல்லவா திரும்ப வேண்டும்? அதுவே, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சிறந்த முன்னெடுப்பாக இருக்கும்.

மொத்தத்தில், ‘சித்திரைச் செவ்வானம்’ பாலியல் வன்முறைகளுக்கு எதிரான திரைப்படமாகவும் இல்லாமல், ‘த்ருஷ்யம்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் இல்லாமல் குழம்பிப்போய் நிற்கிறது.

உலகைக் கலக்கிய ‘கௌபாய் பிபோப்’:

1998-ம் ஆண்டு ஜப்பானிய அனிமே தொடர்களில் பெரும்புரட்சியை உண்டுபண்ணிய ‘கௌபாய் பிபோப்’ என்ற அனிமே தொடர் தற்போது உயிரூட்டப்பட்டு, பொம்மைப் படமாக இல்லாமல் நடிகர்களை வைத்து வெப் தொடராக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

இன்று, உலகம் முழுக்க ஜப்பானிய அனிமே தொடர்கள் மற்றும் படங்கள் பிரபலமாவதற்கு முக்கிய காரணங்களில், 1998-ம் ஆண்டு வெளிவந்த இத்தொடரும் ஒரு முக்கிய காரணம். நியோ-நாய்ர் டிஸ்டோபியன் திரைக்கதையைக் கொண்ட இந்தச் சித்திரத் தொடரின் மூலக் கதையிலிருந்து சிதைக்கப்படாமல் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது, தற்போது வெளிவந்துள்ள கௌபாய் பிபோப்.

2071-ம் ஆண்டில்...

2021-ல் உலகம் அழிந்த பின்பு, ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து 2071-ல் நடக்கும் இத்தொடரின் திரைக்கதையில், பிரபஞ்சத்தில் மிதக்கும் பெரிய விண்கற்கள், நிலவு மற்றும் வேறு பல கிரகங்களில் மனிதர்கள் வசித்துவருவார்கள். மிதமிஞ்சிய மக்கள் தொகையால் இன்டர் சோலார் சிஸ்டம் போலீஸ் (ISSP) குற்றவாளிகளைப் பிடிக்க வெகுமதி வேட்டையர்கள் முறையைப் பயன்படுத்துவார்கள். இந்த வெகுமதி வேட்டையர்கள் கௌபாய் என்று அழைக்கப்படுவார்கள்.

‘கௌபாய் பிபோப்’ என்னும் விண்கலத்திலிருந்து இயங்கும் ஒரு வெகுமதி வேட்டையர் குழுவைச் சுற்றியே இத்தொடர் நகர்கிறது. இந்தக் குழுவின் தலைவனான ஸ்பைக் கதாபாத்திரத்தில், தென்கொரியாவை பூர்விகமாகக் கொண்ட ஜான் சோ நடித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக வரும் கதாபாத்திரங்களான ஜெட் பிளாக் கதாபாத்திரத்தில், முஸ்தாபா ஷாகிர் நடித்துள்ளார். 10 எபிசோடுகளுடன் முதல் சீசன் தற்போது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 10-வது எபிசோட் கிளிப்ஹேங்கருடன் 2-வது சீசனுக்கான முகாந்திரத்துடன் முடிக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானியப் படைப்பான கௌபாய் பிபோப் கதை, ஜப்பானிய மொழியில்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, ‘கௌபாய் பிபோப்’ அனிமே பார்த்து வளர்ந்த பல 90’s கிட் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது. ஜப்பானிய அனிமேக்களை விரும்பும் ‘ஒட்டாக்கூ’ என்று அழைக்கப்படும் ரசிகர்களுக்கு, ஒரிஜினலான ஜப்பானிய வசனங்களுடன் ஆங்கில சப் டைட்டில் உதவியுடன் பார்ப்பதே முழு திருப்தியளிக்கும். இந்த ஒரு குறையைத் தவிர, மற்றபடி பரபரப்பான எபிசோடுகளுடன் சீறிப்பாய்கிறது ‘கௌபாய் பிபோப்’.

x