பாலிவுட்டின் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ், தற்போது வெப் தொடர்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. தங்களின் முதல் வெப் தொடராக ‘தி ரயில்வே மென்’ தொடரைத் தயாரிக்கவுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இயங்கி வந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து, 1984 டிச.2-ம் தேதி விஷ வாயு (methyl isocyanate) கசிந்தது. இதை சுவாசித்தவர்களில் 3,200-க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக உயிரிழந்தனர். ஒருவார காலத்தில் மரண எண்ணிக்கை 8,000 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த வாரங்களில் மேலும் 8,000 பேர் மரணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. துல்லியமான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விஷ வாயுவால் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவாக இது கருதப்படுகிறது.
இந்தப் பேரழிவின் போது, போபால் ரயில் நிலையத்தில் வேலை செய்த சில ஊழியர்கள் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பலபேரைக் காப்பாற்றினர். ‘தி ரயில்வே மென்’ வெப் தொடர், இந்த முகம் தெரியாத ஹீரோக்களின் செயலை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் மாதவன், கேகே மேனன் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கானும் இதில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் ஷிவ் ரவையல் இந்த வெப் தொடரை இயக்கவுள்ளார்.
போபால் பேரழிவின் போது, தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பலரது உயிர்களைக் காப்பாற்றிய முகம் தெரியாத அந்த ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த வெப் தொடரை எடுப்பதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.