நெஞ்சில் தைக்கும் பெண் மையக் கதைகள்


மூன்று தசாப்தங்களில் வாழும் 3 பெண்களின் வாழ்க்கையை, பெண் மையப் பார்வையில் பதிவு செய்திருக்கிறது ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம். இதற்காக 3 எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இருந்து ஒரு ஆந்தாலஜி படைப்பை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வஸந்த் எஸ். சாய். இந்த ஆந்தாலஜியை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.

மணிரத்னத்தின் நவரசா ஆந்தாலஜியில், வஸந்த் இயக்கிய ‘பாயாசம்’ தனி கவனத்தைப் பெற்றது. தி.ஜானகிராமனின் சிறுகதையை திரைவடிவத்துக்கு மாற்றிய வஸந்த்தின் முயற்சிக்கு வரவேற்பும் கிடைத்தது. ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆந்தாலஜியில், அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் என 3 எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இருந்து 3 குறும்படங்களை உருவாக்கியிருக்கிறார் வஸந்த்.

சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி என 3 பெண்கள். எண்பதுகள், தொண்ணூறுகள், புத்தாயிரம் என அடுத்தடுத்த தசாப்தங்களில் வாழ்பவர்கள். இந்த மூவரையும் இணைக்கும் பெண் மைய அம்சத்தை, ஆந்தாலஜிக்கான குறியீடாக வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆணின் பீடம் தகர்க்கும் சரஸ்வதி

முதல் கதை 1980-ல் நடக்கிறது. அசோகமித்திரனின் விமோசனம் சிறுகதை, ’சரஸ்வதி’ என்ற குறும்படமாகி இருக்கிறது. தொழிற்சாலை ஊழியனான கணவனை நம்பி சரஸ்வதியும், கைக்குழந்தையையும் கொண்ட குடும்பம் ஒண்டுக்குடித்தனத்தில் இயங்குகிறது. கட்டியவன் பாராமுகமாக இருக்க, அன்றாட பிழைப்புக்கான அரிசி, பருப்புக்குக் கூட அண்டை வீடுகளில் கடன் வாங்கித் தடுமாறுகிறாள் சரஸ்வதி. கணவனோ எண்பதுகளில் செழித்திருந்த ஆணாதிக்கத்தின் மொத்த உருவாக இருக்கிறான். தோளில் மாட்டிய பைகள், கையில் ஏந்திய குழந்தையுடன் தவிப்பாக பின்தொடரும் மனைவியை விட்டு பேருந்தில் தொற்றிக்கொள்ளும் அறிமுகக் காட்சியிலேயே, அந்தக் கணவனின் போக்கை உணர்த்தி விடுகிறார் இயக்குநர். பாராமுகம் மட்டுமல்ல, அழும் கைக்குழந்தையால் உறக்கம் கெடுகிறது என்று மனைவியை இழுத்துப்போட்டு அடிக்கிறான். அப்படியொரு நாள் அத்துமீறி துன்புறுத்தும் கணவனிடம், வலிபொறுக்காத மனைவி ஒற்றை விநாடி தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறாள். அந்தச் சிறு எதிர்வினையில் அவனின் பீடம் சுக்குநூறாகிறது. அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதே சரஸ்வதி குறும்படத்தின் கதை.

தனியுரிமை பேசும் தேவகி

தேவகி கதை தொண்ணூறுகளின் மத்தியில் நடக்கிறது. கணவனுக்கு இணையாகப் படித்து, அரசுப் பணிக்கு செல்லும் பெண் தேவகி. புதுமண ஜோடியாக புக்ககத்தில் வாழத் தலைப்படுபவளுக்கு புதிரான சிக்கல் எழுகிறது. அதுவும் சக பெண்களால் பொறியாக எழுந்து, குடும்பத்து ஆண்களால் பெரு நெருப்பாக ஊதப்படுகிறது. மேம்போக்கில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று தோன்றுவதை, இதுதான் பிரச்சினை என பொட்டில் அடித்து உணர்த்துகிறாள் தேவகி.

படித்துப் பணிக்குச் செல்லும் பெண், தனிமையில் டைரி எழுதுவதையும் அதை பீரோவில் பூட்டி வைப்பதையும், புகுந்த வீடு பெரிய பிரச்சினையாக்குகிறது. அவர்கள் மத்தியில் துணிச்சலான முடிவெடுக்கிறாள் தேவகி. இந்தக் குறும்படம் முழுக்க ஒரு சிறுவனின் கோணத்தில் கதை சொல்லப்படுவது, படைப்பின் ரசனைக்கு சிறப்பான சுவை சேர்க்கிறது. 10 வயது சிறுவனின் பார்வையும், தவிப்பும் உள்ளடங்கிய கதையோட்டம் எந்த இடத்திலும் பிசிறடிக்காது செல்கிறது.

நான்கு சுவருக்குள் ஓடும் சிவரஞ்சனி

மூன்றாவது கதை சிவரஞ்சனி. ஓட்டப் பந்தயத்தில் தகுதியும், கனவும் கொண்டிருக்கும் கல்லூரி மாணவியை, பாதிப்படிப்பில் மறித்து பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். ஓட்டம் அதையொட்டிய அங்கீகாரம் என தவிக்கும் உள்ளத்தோடு இல்லற வாழ்க்கையில் அந்த வீராங்கனை சரிந்து விழுகிறாள். தடகளத்தில் விரைய வேண்டிய அவளது ஓட்டம், குடும்பம், குழந்தை, கணவர், மாமியார் என சின்ன வட்டத்துக்குள் சிக்கியதில் மூச்சு முட்டுகிறாள்.

நான்கு சுவருக்குள் அன்றாடம் மேற்கொள்ளும் ஓட்டத்தில் அவள் மனம் திருப்தி கொள்ளவில்லை. எதிர்பாரா ஒரு கட்டத்தில், சிவரஞ்சனியின் கனவு மேகம் அவள் கைகளை தொட்டுச் செல்கிறது. அப்போதைய அவளின் உணர்வுகளோடு சிவரஞ்சனி குறும்படம் முடிந்து விடுகிறது. ஆணை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்பும், அதற்கு இதரப் பெண்களும் இணங்கிப் போவதையும் பெரிதாக உடைத்துப் பேசுகிறது சிவரஞ்சனி. சிவரஞ்சனியின் கணவனாக வரும் கார்த்திக்கும் கவனிக்க வைக்கிறார்.

சோதிக்கும் காட்சிகள்

3 குறும்படங்களும் தலா 40 நிமிடங்களில் விரைகின்றன. இது சிறுவட்டத்துக்கான கலை படைப்பா அல்லது வெகுமக்களுக்கான ஜனரஞ்சக திரைப்பட பாணியா என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாது, கதை கோருவதை படைப்பாக்கி இருக்கிறார் வஸந்த். இதனால் ஆங்காங்கே பொறுமையை சோதிப்பதாகவும், இழுவையாகவும் தட்டுப்படுகிறது.

சரஸ்வதியில் காரை பெயர்ந்த வீடும், அதற்குள் சிந்தும் வெளிச்சமும், அரிதாரமற்ற பிரதான பாத்திரங்களும் கதைக்கான தாக்கத்தைத் தந்துவிடுகின்றன. சரஸ்வதியாக தோன்றும் காளீஸ்வரி, எண்பதுகளின் மத்திய வர்க்க பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார். அந்த வீட்டிலிருக்கும் நாற்காலி இன்னொரு கதாபாத்திரமாகவே வருகிறது. கணவன் வீற்றிருக்காத அந்த நாற்காலியை சதா தவிப்புடன் நோக்கும் சரஸ்வதி, பிற்பாடு அதில் அமர்ந்து காபி சுவைக்கும் தருணத்தில் கதை சொல்லலின் நேர்த்தி பிடிபடுகிறது. சரஸ்வதியின் கணவனாகத் தோன்றும் கருணாகரனின் குணச்சித்திர முயற்சிகள் பெரிய அளவில் தாக்கம் தரவில்லை.

அவலக் கவிதை

தேவகி குறும்படத்தில், பார்வதி திருவொத்து எதிர்பார்ப்புகளை அதிகம் விதைக்கிறார். கதையின் முடிவை சற்றும் ஊகிக்கவிடாத தொடக்கக் காட்சிகளில் இளமையும், இனிமையுமாக வளைய வருகிறார். மருமகள் டைரி எழுதுகிறாள் என்ற உப்புசப்பில்லாத விஷயத்தை அவளது புகுந்தவீடு பெரும் பிரச்சினையாக்குகிறது. அதற்கு தேவகியின் பதில்வினையும், பதிலடியும் குறும்படத்தின் தனித்துவக் காட்சிகள். சரஸ்வதிக்கு காபி போல, தேவகி தேநீர் சுவைக்கும் ஒய்யார காட்சி, பக்கம் பக்கமாய் பேச வேண்டிய வசனங்களை பார்வையாளர்களுக்கு உணர்த்தி விடுகிறது.

சிவரஞ்சனி கதையில் கணவரோ மாமியாரோ வில்லத்தனம் செய்யவில்லை. ஆனால், குடும்ப அமைப்பின் பெயரால் பெண்ணை நேக்காக நசுக்குகிறார்கள். அதை முழுதாக உணர்ந்தவளாக தனக்கான திறப்புக்காக சிவரஞ்சனி காத்திருக்கிறாள். அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டிய தருணத்தில், அவளது முகத்தில் தேங்கும் ஆதுரப் புன்னகையுடன் ஆந்தாலஜி நிறைவடைகிறது. சிவரஞ்சனியாகத் தோன்றும் லட்சுமி ப்ரியா, குடும்ப நிறுவனங்களில் அன்றாடம் சிதைக்கப்படும் ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாக தன்னை முன் நிறுத்துகிறார். அணிந்த நைட்டியோடு பள்ளிப் பேருந்தின் பின்னால் ஓடும் அந்த ஒரு காட்சி, அவலக் கவிதை.

இளையராஜாவின் மவுனகீதம்

பார்த்துப் பழகிய திரைமொழிக்கு அப்பால், புதுவிதமான கதைச் சொல்லலை இயக்குநர் வஸந்த் கையாண்டிருக்கிறார். இது சற்று திணறலைத் தந்தாலும், சமரசமின்றி கதைக்கு நியாயம் சேர்க்கிறது. வசனங்களை குறைத்து காட்சி மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது, படைப்புக்கு முழுமை சேர்த்திருக்கிறது. தசாப்தங்களுக்கு ஏற்றவாறு காலவெளியை பிரதிபலிக்கும் வீடுகள், உடுப்புகள் என கலை நேர்த்தியிலும், ஒளிப்பதிவிலும் கூட குறும்படங்கள் ஈர்க்கச் செய்கின்றன. பின்னணி இசை இளையராஜா. தனியாய் தன் இசை தெரிந்துவிடக்கூடாது என்ற அவரது மெனக்கிடலால், மவுன வெளிகளில் கூட ஏதோவொரு இசை கசிவதாகத் தோன்றுகிறது. ஓடிடியின் பெண் மையக் கதைகளின் வரிசையில் தனியிடம் பிடித்திருக்கிறது ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆந்தாலஜி.

x