நைட்டி போட்டு நடிக்கிறத உலகமகா குத்தமா பாக்குறாங்க!


கிருத்திகா அண்ணாமலை

ஆனந்தம், செல்லமே, முந்தானை முடிச்சு, மரகத வீணையென ஏகப்பட்ட மெகா சீரியல்களில் நடித்துள்ள கிருத்திகா அண்ணாமலை, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' தொடரில் அசத்திவருகிறார். அடாது மழைக்கு நடுவில் அவரிடம் பேசியதிலிருந்து...

நீங்க சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டீங்க... எப்படி வாய்ப்பு அமைஞ்சதுன்னு நினைவிருக்கா?

எங்க அம்மாவுக்கு நடிக்க ரொம்பவே ஆசை இருந்திருக்கு. அவங்களால முடியாத அந்த ஆசையை என் மூலமா நிறைவேத்திக்கிட்டாங்க. சத்யராஜ் சார் நடிச்ச, ‘ஆண்டான் அடிமை’ படத்தில் அவருக்கு தங்கச்சியா நடிச்சதுதான் சினிமாவுல எனக்குக் கிடைச்ச முதல் வாய்ப்பு. அந்த நேரத்துல 10-வது படிச்சிட்டு இருந்ததால, படிப்பு கெட்டுடக் கூடாதுன்னு நடிப்புக்கு பிரேக் போட்டுட்டேன்.

கிருத்திகா அண்ணாமலை

மறுபடி எப்போ நடிக்க வந்தீங்க?

நான் காலேஜ் படிக்கும்போது கல்ச்சுரல் செக்ரட்டரியா இருந்தேன். அப்போ எங்க காலேஜ் ஃபங்ஷனுக்கு சிறப்பு விருந்தினரா 'மெட்டி ஒலி' திருமுருகன் சார் வந்திருந்தாங்க. நான் ஓடியாடி வேலை பார்த்ததை கவனிச்சிட்டு, “இவ்ளோ துறு துறுன்னு இருக்கியே... நடிக்க வாரியாம்மா”ன்னு கேட்டார். அப்படித்தான் ‘மெட்டி ஒலி’ அருந்ததி கேரக்டர் மூலமாக என்ட்ரி ஆனேன். அப்ப தொடங்கி இப்பவரைக்கும் பேசப்படும் இடத்தில் இருக்கிறேன்.

சீரியல்களில் ஏராளமான மாற்றங்கள் உருவாகியிருக்கே... உங்க அனுபவத்துல இதையெல்லாம் எப்படிப் பார்க்குறீங்க?

கிருத்திகா அண்ணாமலை

‘மெட்டி ஒலி’யில் நடிக்கும்போது சின்ன மேக்-அப் கூட போட மாட்டோம். அப்போதான் ரியலா இருக்கும்னு சொல்வாங்க. இரவு நேர சீன்ல நடிக்கும்போது, சாதாரணமா நைட்டில கேஷுவலா நடிச்சிருக்கோம். ஆனா, காலப்போக்குல நிறைய மாற்றங்கள். இப்போலாம் நைட்டி போட்டு நடிக்கிறதையே உலகமகா குத்தம் மாதிரி ட்ரீட் பண்றாங்க. நைட்டுலகூட சேலை கட்டி, முழு மேக்-அப்போடதான் இப்போலாம் சீன்ஸ் எடுக்கிறாங்க. இதெல்லாம் ஹிந்தி சீரியல்களால வந்த பாதிப்பு. நல்லா அழவேண்டிய ஸீன்லகூட “ஃபுல் மேக்-அப்போட வாங்க; க்ளிசரின் போட்டு அழுதுக்கலாம்”னுதான் சொல்றாங்க. இதை ஆடியன்ஸும் அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க. அவங்களும் எங்களோட டிரஸ்ஸிங்ஸ், ஜுவல்ஸ நோட் பண்ணி அதுபத்திப் பேசுறாங்க; கேட்கிறாங்க. அதனால நாங்களும் ரொம்பவே பிளசன்டா எங்களை காட்டிக்க வேண்டி இருக்கு. அதனாலே, இப்போ காஸ்டியூம்ஸுக்காக நிறைய செலவு பண்ண வேண்டியிருக்கு.

மறுபடியும் சினிமா பக்கம் போற ஐடியா ஏதும் இருக்கா?

நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா நான் இன்னும் சீரியல்லயே விதவிதமான கேரக்டர்ஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன். விதவிதமான வில்லி ரோல்ஸ் பண்ணணும்னு ஆசை இருக்கு. அதுக்காக என்னைய வருத்திக்கிட்டுக்கூட நடிக்கத் தயார். மூவீஸ்ல ஒரு சிக்கல் இருக்கு. கதை சொல்லும்போது நல்லாவே சொல்லுவாங்க. ஆனா, படத்தோட நீளத்தைக் குறைக்கணும்னு வந்தா நம்ம சீன்ஸைக் குறைச்சிருவாங்க. கடைசியில, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பண்ணுன மாதிரி நம்ம ஏரியா இருக்கும். இப்படி நடக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதனால தான் சினிமாவுல கமிட் ஆக யோசனையா இருக்கு.

உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா யாரைச் சொல்வீங்க... நீங்க பெற்ற மறக்கமுடியாத பாராட்டு எது?

இன்ஸ்பிரேஷன்னா எங்க அம்மாதான். அவங்க ரொம்ப போல்ட் உமன். அப்பா இல்லாத நிலையிலும் எங்களை உயர்வான இந்த நிலைக்கு கொண்டு வந்தவங்க. கன்னட நடிகர் ராஜ்குமார் சார், மெட்டி ஒலி சீரியலின் தீவிரமான ரசிகர். ஒருமுறை எங்க மெட்டி ஒலி டீமை பெங்களூருவுக்கு அழைத்து, பாராட்டு விழா நடத்தி, விருது கொடுத்தார். அதை எப்பவும் மறக்கமுடியாது.

x