‘பேய்ப் படம்’ என்ற பெயரில் காமெடியைக் கலந்து வெறுப்பேற்றும் சமகாலத் திரைப்படங்களுக்கு மத்தியில், மெய்யாலுமே ஒரு பேய் படத்துக்கான ரசிப்பனுபவத்தைத் தருகிறது ‘லிஃப்ட்’ திரைப்படம். ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடி ஓடிடி வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கவின், அதன் சென்னை கிளைக்கு மாற்றலாகிறார். அவரது பணியேற்பில் தொடங்கும் கதை, அதே வளாகத்தில் அடுத்த நாள் பொழுது விடிவதற்குள் முடிந்துவிடுகிறது. பெரும்பாலான காட்சிகள் ஐ.டி நிறுவனத்தின் கான்கிரீட் சுவர்களுக்குள்ளாகவே சுற்றிச்சுற்றி வருகின்றன. அதிலும் லிஃப்ட் சாதனத்தின் குறுகிய பரப்புக்குள் கணிசமாகக் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனபோதும், இரண்டே கால் மணி நேரத்துக்கு போதுமென்ற அளவுக்கு பயமுறுத்தி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சியுடன் வழியனுப்பி வைக்கிறது ‘லிஃப்ட்’. பேயின் பெயரால் காமெடி செய்கிறோம் பேர்வழியென்று, ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கிளறும் படங்களுக்கு மத்தியில், பேய்ப் பட ரசிகர்களின் வயிற்றில் ‘லிஃப்ட்’ பால் வார்க்கவும் செய்கிறது.
அலுவலகத்தில் ஒளிந்திருக்கும் அரூபங்கள்
சென்னை, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் டீம் லீடராகப் பணியேற்கும் கவின், அன்றைய தினம் சுவாரசியமான அனுபவங்களை எதிர்கொள்கிறார். ஹெச்.ஆர் மேனேஜராக அறிமுகமாகும் அம்ரிதாவுடனான அவரது கடந்த கால மோதல் அனுபவம், அன்றைய தினத்தைக் காதல் அனுபவமாக்க எத்தனிக்கிறது. முதல் நாளிலேயே பணிச்சுமை காரணமாக பின்னிரவு வரை கணினி நிரல்களில் கரைந்துபோகும் கவின், ஒருவழியாய் அலுவலகத்தைவிட்டு கிளம்ப முற்படுகையில் வெளியேறுவதற்கான எல்லா வழிகளுமே அடைபடுவதாய் உணர்கிறார். முக்கியமாய் அலுவலக லிஃப்ட் ஓர் அடிபட்ட விலங்குபோல அவரை அலைக்கழிக்கிறது.
இந்தத் தடுமாற்றத்தில் அவரைப் போலவே அலுவலகத்தில் சிக்கிக்கொண்ட அம்ரிதாவும் இணைந்துகொள்ள, இருவருமாய் சேர்ந்து அந்த அலுவலகத்தில் தாங்கள் தனியாக இல்லை என்ற உண்மையை உணர்கிறார்கள். அங்கிருந்து ஒரு பேய்ப் படத்துக்கான சகல மசாலாக்களையும் சேர்த்துக்கொண்டு, பயமுறுத்தலுக்கான ரோலர் கோஸ்டர் அனுபவத்தில் ரசிகர்களை ஆழ்த்துகிறது ‘லிஃப்ட்’.
பயமுறுத்தல் அத்தனை சுலபமல்ல!
பேய்ப் படங்களில் ரசிகர்களைத் தொடர்ந்து பயமுறுத்தலில் வைத்திருப்பது அத்தனை சுலபமில்லை. அதற்காகப் பேயின் இருப்பை மட்டுமே அவ்வப்போது அடையாளம் காட்டுவதுடன் அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடுவார்கள். ‘லிஃப்ட்’ படமும் அந்த உத்தியையே பின்பற்றுகிறது. ஒரு சில திகிலான காட்சிகளில் தொடங்கி, வெடிகுண்டுக்கான நீளமான திரியைப்போல திரைக்கதை நிதானமாய் வேகமெடுக்கிறது. ஒரு கட்டத்தில், கதை அடுத்த கட்டத்துக்கு நகரும்போது பேய்ப் படங்களின் தவிர்க்க முடியாத லாஜிக் ஓட்டைகளை மறந்து, கதையில் நம்மை ஒன்றவும் வைக்கிறது. அஃறிணைகளை வைத்து பயங்காட்டுவதன் வரிசையில், இந்தப் பேய்ப் படத்தில் கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றின் லிஃப்ட்டை முன்னிறுத்துகிறார்கள். சற்றுப் புதுமையாக தொனிப்பதோடு மின் தூக்கியை மையமாக்கி, தவணை முறையில் மின்னதிர்ச்சி பயமுறுத்தல்களும் கிடைக்கின்றன. திரைப்படத்தின் தலைப்பிலும் கதையின் மையச்சரடிலும் லிஃப்ட் என்பதன் அவசியத்தை, க்ளைமாக்ஸில் நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
கவின் - அம்ரிதா
கவினுக்கு அவரது சின்னத்திரை அனுபவங்கள் கைகொடுக்கின்றன. பெரிய திரைக்காக, இன்னும் ஸ்மார்ட்டாகத் தன்னைச் செதுக்கிய தோற்றத்துடன் இதில் தோன்றுகிறார். ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் கெத்தான தோற்றத்தை அடியொற்றி, லிஃப்ட் திரைப்படத்தின் தொடக்க காட்சிகளில் ரசிக்கவைக்கிறார். அதன் பின்னர் திகில் காட்சிகளில் பயந்து நடுங்குவது, துரத்தும் பேய்க்கு அஞ்சி ஓடுவது, ஒரு திருப்பத்தில் புத்திசாலித்தனமாய்த் திருப்பியடிப்பது என கலவையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது பிரத்யேகமான சின்னச்சின்ன பாவனைகள், இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன. திகில் படத்துக்கு அவசியமான பின்னணிக் குரலுக்கும் உழைத்திருக்கிறார். கவின் அளவுக்குச் சொல்ல முடியாது என்றாலும், அம்ரிதாவும் தனது குறைந்தபட்சத் திரை இருப்பை நிரூபித்திருக்கிறார்.
ஒட்டுமொத்த உழைப்பு
கண்ணுக்குக் காட்சி தராது சதா மிரட்டிக்கொண்டே இருக்கும் பேய், அதனது உலாவலும் இருப்பும் அடைபட்டிருக்கும் ஒழுங்குமுறைச் சட்டகம், பேயிடம் புதைந்திருக்கும் நியாயங்கள், மனிதர்களிடம் அது விளைவிக்கும் தூண்டல்கள் என கதைக்கும் காட்சிகளுக்குமான எழுத்து திரைப்படத்தின் பலமாக இருக்கிறது. பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசையும், தபாஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பும் தனியாகப் பயமுறுத்துகின்றன. அடைபட்ட சுவர்களுக்குள் சுழலும் காட்சிகளின் அலுப்பை யுவாவின் ஒளிப்பதிவும், மதனின் படத்தொகுப்பும் போக்குகின்றன. தீப்பற்றல் உள்ளிட்ட ஒரு சில காட்சிகளின் விஎஃப்எக்ஸ் துறுத்தலாகத் தெரிந்தாலும் உரிய பிரம்மாண்டத்தைக் கடத்துகின்றன. எடுத்துக்கொண்ட கதைக்கான எழுத்து, அதைச் சரியாக ரசிகரிடம் சேர்ப்பதற்கான திரைமொழி உத்திகள் ஆகியவற்றில் இயக்குநர் வினித் வரபிரசாத்தின் தெளிவும் படத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
’சார்லி.. சார்லி..’ சலிப்புகள்
பேயிடம் சிக்கியவர்கள் அலுவலகத்திலும், லிஃப்டிலும் அடைபட்ட காட்சிகள் அடிக்கடி வருவது திரைப்படத்தின் மத்தியில் தொய்வூட்டுகிறது. எங்கே ‘இன்னா மயிலு...’ பாட்டைக் காணோம் என காத்திருக்க வேண்டியதாகிறது. படத்தின் நீளத்தில் 20 முதல் 30 நிமிடங்களைத் தாராளமாகக் குறைத்திருக்கலாம். பேய் இருப்பை உறுதிசெய்யும் ’சார்லி சார்லி...’ விசாரிப்புகள், கேமராவில் மட்டுமே பதிவாகும் பேய், பயமுறுத்தலை மட்டுமே தந்துவிட்டு விலகிச்செல்வது, லிஃப்ட் உள்ளே கையில் கத்தியுடன் அரங்கேறும் நாடகங்கள் உள்ளிட்டவை இந்தப் பேய்ப் படத்தையும் அவல நகைச்சுவைக்குள் தள்ளிவிடுவார்களோ எனத் தனியாக பயப்பட வைக்கிறது. பேய்க் காட்சிகளைவிட தற்கொலைக் காட்சிகளின் குரூரம், இது சிறார் பார்வைக்கு உகந்த படமல்ல என்கிறது.
‘இன்னா மயிலு...’
இது, மலின பயமுறுத்தலுக்கான திரைப்படம் இல்லை என இறுதிக்காட்சியில் நிரூபிக்கிறது ‘லிஃப்ட்’. அங்கே விரியும் நெகிழ்ச்சியான பின்னணி, அதுவரையிலான பேயாட்டத்தைப் பரிதாபத்தில் தள்ளுகிறது. போகிற போக்கில் ஐடி நிறுவனங்களின் மறுபக்கம், கார்ப்பரேட் உலகின் கோர முகம் ஆகியவற்றையும் இப்படம் அம்பலப்படுத்துகிறது. அவற்றுக்கான சாடல் வசனங்கள் மற்றும் காட்சிகளின் அனுபவப்பூர்வமான கசப்பும், நிதர்சனத்தின் நெருப்பும் அதிகம்.
இந்த ஐடி பகடியில் ’இன்னா மயிலு...’ பாடல் வரிகளும் சேர்ந்துகொள்கின்றன. வெளியீட்டுக்கு முன்பாக, ‘லிஃப்ட்’ திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இந்தப் பாடலுக்கே சேரும்.
உருக்கமான க்ளைமாக்ஸ், அதன் பின்னணியை விளக்கும் அதிர்ச்சிகரமான நிஜ வீடியோக்கள் என கனமான மனத்தோடு விடைபெறத் தயாராகும் ரசிகர்களைக் குதூகலமூட்டி அனுப்புகிறது, துள்ளாட்டம் நிறைந்த ‘இன்னா மயிலு’ பாடல். சிம்பு, தனுஷ் பாணியில் சிவகார்த்திகேயன் பாடியிருக்கும் இந்தப் பாடல், தனக்கான தனி வெற்றியையும் சாத்தியமாக்கி உள்ளது. யூடியூபில் வெளியான இரண்டே நாளில், 2 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பதில் அதன் ரசிக அடைவு புரியும்.
சிறப்பான ஸ்பீக்கர் வசதியுடன் இரவில் பார்த்து, பயந்து ரசிப்பதற்கான திரைப்படம் ‘லிஃப்ட்’!