ஊழல்களால் வஞ்சிக்கப்பட்ட குக்கிராமம் ஒன்றுக்கு, எளிய கிராமத்தான் வளர்க்கும் காளைகளால் எப்படி விடிவு பிறக்கிறது என்பதுதான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம். அண்மையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஜோதிகா & சூர்யா தயாரிக்க, அரிசில் மூர்த்தி இயக்கியிருக்கிறார்.
காளைகளும் கிராமமும்
பூச்சேரி கிராமத்தில் வசிக்கும் குன்னிமுத்து, வீராயி தம்பதிக்குக் கறுப்பன், வெள்ளையன் என 2 ‘குழந்தைகள்’. வீராயி, தாய் வீட்டு சீதனமாகக் கிடைத்த 2 கன்றுகளையும் இப்படி பிள்ளைகள் போல பெயரிட்டு உயிருக்கு உயிராக வளர்க்கிறார்கள். எவர் கண் பட்டதோ, திடீரென காளைகள் இரண்டும் காணாமல் போகின்றன. களவுச் சம்பவத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியல் கள்ளத்தனம் குட்டுடையும்போது, ஊரின் மேல் கவிழ்ந்திருக்கும் ஊழல் சாபக்கேடும் வெளிச்சத்துக்கு வருகிறது. காணாமல்போன காளைகள் இரண்டும் திரும்பவும் கிடைத்தனவா, ஊருக்கு விடிவுகாலம் பிறந்ததா என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை காண்கிறது ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம்.
படம் நெடுக பகடி
காணாமல்போன காளைகள் குறித்து புகார் அளிப்பதற்காக, குன்னிமுத்து காவல் நிலையம் செல்வதில் திரைப்படம் தொடங்குகிறது. அவர் கண்முன்பாகவே எம்எல்ஏ வீட்டு நாய் காணமல்போன புகார் பவ்யமாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், குன்னிமுத்துவின் காளை புகார் நிராகரிப்புக்கும், அவமானத்துக்கும் ஆளாகிறது. அங்கே தொடங்கி, சாமானியர்களின் குமுறல்கள் பலவற்றையும் போகிறபோக்கில் படம் நெடுக பகடியும், உறைப்புமாகப் பற்றவைக்கிறார்கள்.
‘துக்ளக்’ வைத்திருப்பவர் ஊரின் அறிவாளி என அறியப்படுவது, ’இன்ஜினியரிங் படித்த புரோட்டா மாஸ்டர் தேவை’ என்ற சுவர் விளம்பரம், அரசு விழாக்களில் கால்நடை வழங்கல் எனும் பெயரில் நடக்கும் பித்தலாட்டங்கள், மின்சாரம் இல்லாத கிராமத்து வீட்டில் குவியும் விலையில்லா மின் சாதனங்கள், பிரேக்கிங் செய்திகளுக்காகக் காட்சி ஊடகங்கள் கன்டென்ட் தேடித் திரிவது, அரசியல்வாதிகளும் போலி விவசாய சங்கத் தலைவர்களும் அவற்றில் கவனம் பெறத் துடிப்பது, வறுமையால் கேசம் வறண்ட கிராமத்துச் சிறுமி நவநாகரிக யுவதியின் செம்பட்டை முடியை வியப்புடன் விசாரிப்பது, காளைக்குப் பதில் பசு காணாமல் போயிருப்பின் அலட்சியம் காட்டுவார்களா என்ற சாடல்... இப்படிக் காட்சிதோறும் அவை சரவெடியாய் வெளிப்படுகின்றன.
அசலான பாத்திரங்கள்
குன்னிமுத்துவாக அறிமுக நடிகர் மிதுன் மாணிக்கம். வார்த்து வைத்ததுபோல ஒரே பாவனையில் படம் முழுக்க விரக்தியும், அங்கலாய்ப்புமாக காளைகளைத் தேடி அலைகிறார். கிராமத்து எளிய மனிதனின் வெகுளியும், கோபமும் அவருக்கு ஓரளவு கூடியும் வருகிறது. மிதுனைவிட அவரது சகா மந்தினியாக தோன்றும் வடிவேல் முருகனின் இயல்பான கிராமத்து உச்சரிப்பும், நையாண்டியும் கதைக்கு கைகொடுக்கிறது. அவரும் ‘லச்சுமி’ பாட்டியாக வரும் மூதாட்டியுமே திரைப்படத்தின் முதல் பாதியைத் தாங்குகிறார்கள்.
வீராயியாக வரும் ரம்யா பாண்டியன் காளைகள் மீது பாசம் பொழிவதிலும், அமைச்சருக்கு எதிராகச் சாடும் இடத்திலும் கவர்கிறார். காளைகளைச் சுற்றிவரும் கதையை டிவி செய்தியாளராக வரும் வாணிபோஜன் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறார். அமைச்சர் மதுக்கூர் மணிவேல் பாத்திரச் சித்தரிப்பும் அதில் நடித்திருப்பவரும் சரியான தேர்வு. சில இடங்களில் அசலான கிராமத்து மைந்தர்களையே நடிக்க வைத்திருப்பதும் பொருந்திப் போகிறது.
போலி அக்கறையும் உள்ளடக்கமும்
படத்தின் ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரின் பின்னணிக் குரல், ‘நமது கிராமங்களைத் திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்’ என்று சென்னைவாசிகளுக்குக் கோரிக்கை விடுக்கிறது. அதன் பிறகான ஒட்டுமொத்தத் திரைப்படமும் அதே தொனியில் அமைந்திருக்கிறது. பெருநகர மக்கள் ரசிப்பதற்கான, மேம்போக்கிலான கிராமத்துக் கதையாகவும் காட்சிகளாகவும் திரைப்படம் செல்கிறது.
பிரியத்துக்குரிய காளைக்கு லாடம் அடிப்பதையும், வங்கிக் கடன் வில்லை பொருத்துவதற்கு அதன் காதில் துளையிடுவதையும் எதிர்த்து கலாட்டா செய்யும் குன்னிமுத்து, அந்தக் காளைகள் காயடிக்கப்பட்டதை மிகச் சுலபமாக உள்வாங்குவது ஆச்சரியம். கிராமம் தொடர்பாக இந்த ரீதியிலான புரிதல்களும், வலிய வருவித்துக்கொண்ட அக்கறைகளுமே படத்தில் அதிகம் தொனிக்கின்றன. காட்சிகளில் புலப்படும் அசலான கிராமம் கதையின் உள்ளடக்கத்திலும் போக்கிலும் அடிக்கடி காணாமல் போகிறது.
அலைபாயும் திரைக்கதை
காளைகளை முன்னிறுத்தி தொடங்கும் கதை, அவை காணாமல் போனதன் பின்னணியில் வேகம் எடுக்கிறது. ஆனால் அதன் பிறகு எங்கே நிலைகொள்வது, எப்படி முடிப்பது என்பதில் திரைக்கதை அலைபாய்கிறது. படத்தின் கடைசி 20 நிமிடங்களில் ஊரின் பொதுப் பிரச்சினையைக் கையிலெடுக்கிறார்கள். உடன் அந்தரத்தில் விடப்பட்ட காளை பிரச்சினை நினைவுக்கு வர, அடுத்த 10 நிமிடங்களில் அதற்கான சோகப்பாட்டு, ராமநாராயணன் பாணியிலான திருப்பம் என கடைசியில் காளையையும், ஊரையும் முடிச்சிட்டு கதையை முடிக்கிறார்கள்.
ஓ.டி.டி வெளியீடு என்பதற்காக எடுத்த முழுநீளத் திரைப்படத்தை 2 மணி நேரத்துக்குள் சுருக்கும் தீவிரத்தில், காட்சிகள் துண்டாடப்பட்டதும் திரைக்கதையை அலைபாய வைத்திருக்கிறது. ஏதேனும் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி அதற்கான விவாதத்தைக் கூர்மையாக்கியிருப்பின், உரிய தாக்கத்தைத் திரைப்படம் தந்திருக்க வாய்ப்புண்டு.
அதிகரிக்கும் சமூக ஊடகப் பிரதிபலிப்பு
சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவை, ட்ரெண்டிங் சமுதாயப் பிரச்சினைகள் என பலவும் கதையில் அதிகம் கையாளப்பட்டுள்ளன. போகிறபோக்கில் சீமான், அய்யாக்கண்ணு போன்றவர்களையும் படம் வகையாகச் சீண்டிச் செல்கிறது. சீமான் ஆதரவாளர்களின் இலவச விளம்பரம் படத்துக்கு நிச்சயம். யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் தோன்றுவதன் வரிசையில், இந்தப் படம் வடிவேல் முருகனை வாரியணைத்திருக்கிறது. இப்படி சமூக ஊடகங்களைப் பிரதியெடுப்பதும், அதில் பிரதிபலிக்க முயற்சிப்பதும் அண்மைத் திரைப்படங்களின் வர்த்தக உத்தியாக மாறி வருகிறது. அதில் இப்படமும் சேர்ந்திருக்கிறது.
கிராமத்து வெம்மையைக் கடத்தும் கேமரா
அரசாங்கமும் ஊராரும் புறக்கணித்த பொதுக்குளத்தைத் தனியாளாய் தூர்வாரும் பெரியவர் கதாபாத்திரம் மிகப் பொருத்தம். ஊருக்குள் நுழைவோரைப் பின்தொடரும் கேமரா அந்தப் பெரியவரையும், சாவடியில் சயனித்திருக்கும் இளைஞனையும் ஒரே ஓட்டத்தில் பதிவுசெய்திருப்பதும் அருமை. எதேச்சையாக அடைக்கலம் தந்த வீட்டிலிருந்தே சடுதியில் பெண் பார்த்து நிச்சயம் முடிக்கும் பாட்டி, கணவனாகத் தேர்வானவனை முகம் திருப்பாது ரசிக்கும் பெண் உள்ளிட்ட சுவாரசியங்கள் ஆங்காங்கே தட்டுப்படுகின்றன. கிராமத்து வெம்மையையும், புழுதியையும் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பார்வையாளருக்கும் உணர்த்துகிறது. பெரும்பாலான பாடல்களைக் கதைக்குள்ளாக, அதன் போக்கிலே அமைத்திருந்தது ஆறுதல்.
ட்ரெய்லர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளைத் திரைப்படம் பூர்த்தி செய்யாது போனாலும், கதையின் சமூக நோக்கம், அவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியது ஆகியவற்றுக்காக கவனம் பெறுகிறது ‘இ.ஆ.இ.ஆ’!