‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் சீசன்-3 எப்படியிருக்கிறது? (Spoiler alert)


கனடாவிலுள்ள மூர்டேல் என்ற சிறு ஊரிலுள்ள பள்ளியில் படிக்கும், ஹார்மோன்கள் கொந்தளிக்கும் வயதிலிருக்கும் பதின்பருவ மாணவ/மாணவியர், அவர்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்கள், அதன் நீட்சியாக தன் உடலைப் பற்றியும், பாலியல் விருப்பம் பற்றியும் அவர்கள் அறிய முற்படும்போது ஏற்படும் இடர்பாடுகள், இவைதான் ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் அடிநாதம். உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்ற ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் 3-வது சீசன், 3 நாட்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நெட்ஃப்ளிக்ஸின் தரவுகளின்படி, இத்தொடர் இந்தியாவில் வெளியான அன்றே, டாப்-10 வரிசையில் இடம்பிடித்து ஹிட் அடித்துள்ளது. அதனால், 4-வது சீசனை உருவாக்கும் பணியிலும் நெட்ஃப்ளிக்ஸ் மும்மரமாக இறங்கியுள்ளது. சரி, தற்போது வந்துள்ள 3-வது சீசன் எப்படியிருக்கிறது?

விறுவிறுப்புக்குப் பற்றாக்குறை:

முதல் சீசன் முடிந்து 2-வது சீசன் வந்தபோது, முதல் சீசன் அளவுக்குக் கதையில் அழுத்தமில்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தன. இப்பொழுது 3-வது சீசனைப் பார்த்தபின், இதற்கு 2-வது சீசனே தேவலாம் என்று பலர் புலம்பும்படிதான் 3-வது சீசனின் கதையமைப்பு இருகிறது என்பது சோகமான உண்மை.

முதல் பாகத்திலும் சரி, 2-வது பாகத்திலும் சரி, முடிவில் வைக்கப்படும் க்ளிஃப்ஹேங்கர் அடுத்த சீசன் எப்போது வரும்? கதையில் அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பைக் கூட்டும் வண்ணமிருக்கும். அதுமட்டுமல்லாமல், அடுத்த சீசனில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்ற அனுமானத்துக்கும் நம்மால் வரமுடிகிறது. (மூர்டேல் பள்ளிக்கு என்னவாகும், அடுத்த தலைமையாசிரியர் யார் என்று நீங்கள் கணித்திருந்தால் அதை கமென்ட் செக்‌ஷனில் பதிவிடுங்கள்). பிரதான கதாபாத்திரமான ஓட்டிஸ் மற்றும் மேவ் இடையில், இறுதியில் வரும் பிரிவு காட்சி அழுத்தமாக இல்லை.

ஓட்டிஸ் - ரூபி

ஆனால், ஓட்டிஸ்-மேவ் இடையிலான உறவு மறுபடியும் துளிர்க்கும் காட்சிக்கு முன்புவரை, பாதி சீசனுக்கு மேல் நீடித்த ஓட்டிஸ்-ரூபி ஜோடி ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டுவிட்டது. இருவருக்குமிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி, சீசனின் பெரும்பலம். எரிக்-ஆடம் இடையிலான தற்பாலின ஈர்ப்பு உறவு, பல இடங்களில் கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் சீசனில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்த ஜாக்சனுக்குத் தனியாகக் கதையில் ட்ராக் எழுதியது போல் தெரிகிறது. ஜாக்சன், பிரதான கதாபாத்திரங்களுடன் அதிகம் கலக்காமல், ஆணும் இல்லாமல், பெண்ணுமில்லாமல் உணரக்கூடிய 'நான் பைனரி-ஜெண்டர்' கொண்ட கால் கதாபாத்திரத்துடன் குழப்பமான உறவை எதிர்கொள்கிறான். மூர்டேல் பள்ளிக்கூடத்துக்கு புதிய தலைமையாசிரியராக வரும் ஹோப் கதாபாத்திரம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அதேசமயம், ஹோப்பின் மிருதுவான இன்னொருபுறத்தை உறுத்தாமல் வெளிப்படுத்திய விதம் அக்கதாபாத்திரத்தை மேலும் அழுத்தமானதாக மாற்றிவிடுகிறது. ஆனால் ஏனோ, ‘ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ்’ திரைப்படத்தில் ஹாக்வர்ட்ஸ் பள்ளியின் தலைமையாசிரியராக வந்து வில்லத்தனம் காட்டிய டொலாரிஸ் உம்ப்ரிட்ஜ் கதாபாத்திரத்தின் சாயல் ஹோப் கதாபாத்திரத்தில் தெரிகிறது.

லில்லி

நாம் ‘செக்ஸ் எஜுகேஷனுக்கு’த் தயாரா?

பாலியல் கல்வி என்பதே பெரும் பாவமாகப் பார்க்கும் நம்மூரில், இதுபோன்ற தொடர்களும் இளைஞர்களின் பார்வைக்குக் கிடைக்கப்பெற்று, ஓரளவுக்கு பாலியல் ரீதியாகத் தெளிவான சிந்தனை கிட்டுவது ஒருபுறம் நல்லது என்று நினைக்கத்தோன்றினாலும், இந்த சீசன் வெளியான பின்பு இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ்களை எல்லாம் கவனிக்கும்போது, தப்புக்கணக்குப் போட்டுவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த 3-வது சீசனின் முதல் எபிசோடின் முதல் 5 நிமிடங்களுக்கு வரும் பாலியல் ரீதியான காட்சிகளைப் புகழ்வது, எரிக்-ஆடம் என்ற தற்பாலின ஈர்ப்பாளர்களின் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதேபோல் உங்கள் கூட்டத்திலிருக்கும் ‘அவனா நீ’ கேரக்டர்களை டேக் செய்யுங்கள் என்று மூடத்தனமான மீம்கள், மேவ் ரசிகர் என்றால் கமென்ட் பண்ணவும், ரூபி ரசிகர்கள் என்றால் லைக் செய்யவும் என்பது போன்ற பதிவுகளால் கடந்த 2 நாட்களாக இணையம் நிரம்பி வழிகிறது. ‘செக்ஸ் எஜுகேஷனில்’ எஜுகேஷனை மறந்து, செக்ஸை மட்டுமே இச்சமூக இளைஞர்கள் எடுத்துக்கொள்கிறார்களோ என்ற அச்சம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை. இந்தத் தொடரில் பேசப்படும் ‘பாடி பாசிட்டிவிட்டி’, பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமை, பாலியலில் ஏற்படவேண்டிய சமத்துவம், பாலியல் பிரச்சனைகளைப் பேசாமல் கண்மூடி இருப்பதையே தீர்வாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பழமையை எதிர்த்தல் போன்ற ஆகச்சிறந்த, சமகாலத்தின் அவசியமான விஷயங்கள் பெரும் விவாத பொருளாக மாற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கும் நாம், அதைவிடுத்து வேறு விசயத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தலைமையாசிரியர் ஹோப்பை ஓட்டிஸ் சந்தித்துப் பேசும் காட்சியில், “இப்பொழுது நாங்கள் வெளிப்படையாகப் பேசும் பிரச்சனைகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. அதைப் பேச மக்களுக்குத் துணிவில்லை அவ்வளவுதான்” என்று சொல்லும் காட்சி கவனிக்கவேண்டிய ஒன்று.

எரிக் - ஆடம்

இன்றைய தேதியில், இணையத்தில் மலிந்துகிடக்கும் வணிக நோக்கு கொண்ட பாலியல் படங்களிலிருந்தே இளைஞர்கள் பாலியல் உறவைப்பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள். சமூகத்தில் பெருவாரியாக நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் பின்னணி இதுதான். இதற்குத் தீர்வு பாலியல் கல்விதான் என்பதை அறிஞர்களும், வல்லுநர்களும் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்க சம்மதிக்காத பிற்போக்குவாதிகள் நிறைந்த இச்சமூகத்தில், ‘செக்ஸ் எஜுகேஷன்’ போன்ற தொடர்கள் பாலியல் கல்வியை சகஜப்படுத்த உதவும் கருவிகளாகப் பாவித்து, அதன் கருத்துகளைப் பேசுபொருளாக மாற்றி, விவாதங்களை முன்னெடுப்பதே இதற்கான விடியலாக இருக்கும்.

‘செக்ஸ் எஜுகேஷன்’ ஒரு பொழுதுபோக்கு தொடர்மட்டுமல்ல. அது ஒரு முன்னெடுப்பு. அடுத்தடுத்து வரப்போகும் சீசன்களில் உறவுச்சிக்கல்களை இன்னும் உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தி, கதையம்சத்தில் கவனம் செலுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

x