ஓ.டி.டி உலா: உள்ளங்கவர் கள்வர்கள்


வலைத்தொடர் வரிசையில் இப்படியொரு வரவேற்பு வேறெந்த ஓ.டி.டி படைப்புக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. ‘மனி ஹெய்ஸ்ட்’ என்ற ஸ்பானிஷ் வலைத்தொடரின் 5-வது பகுதி கடந்த வாரம் வெளியாக, அதையொட்டி உலகின் சகல மூலைகளிலிருந்தும் பெருகியிருக்கும் ரசிக ஆதரவே அதற்கு சாட்சி.

லா கசா டி பேபல்’

2017-ம் ஆண்டின் மத்தியில், ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான தொடர் ‘லா கசா டி பேபல்’. வங்கிக் கொள்ளை ஒன்றை மையமாகக் கொண்ட இந்த தொடருக்கு, உள்நாட்டில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன் அடுத்த சீஸனுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதில் தொடரின் தயாரிப்பாளர்கள் பின்வாங்க, முதல் சீஸனோடு அந்தத் தொடர் முடிவு காண இருந்தது. இடையில் நுழைந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், 15 அத்தியாயங்கள் கொண்ட அந்தத் தொடரை தனது சர்வதேசப் பார்வையாளர்களுக்காக 22 அத்தியாயங்களாக பிரித்து 2 சீஸனாக வெளியிட்டது.

‘மனி ஹெய்ஸ்ட்’ என்ற புதிய தலைப்பிலான அந்த வலைத்தொடர், சர்வதேச ரசிகர்களுக்காக ஆங்கில டப்பிங் மற்றும் சப்-டைட்டிலுடன் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் கணித்தபடியே, அதன் வரலாற்றில் வெற்றிகரமான தொடர்களில் ‘மனி ஹெய்ஸ்’டும் சேர்ந்தது. அதன் பின்னரான 2 சீஸன்களும் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் நிழலில் பெரும் பொருட்செலவில் தயாராயின. தற்போது தமிழ் டப்பிங்கிலும் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.

கொள்ளைகொள்ளும் கதை

சிறிதும் பெரிதுமாய் குற்றப் பின்னணி கொண்ட திருடர்கள் சிலரை, புரொபசர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர் ஒருங்கிணைக்கிறார். ஸ்பெயினில் யூரோ கரன்சிகளை அச்சடிக்கும் ‘ராயல் மின்ட்’ என்ற வங்கியில், மிகப்பெரும் கொள்ளைச் சம்பவத்துக்கு அவர்கள் தயாராகிறார்கள். கரன்ஸி அச்சடிக்கும் வசதி கொண்ட அந்த வளாகத்தில், பலகோடி மதிப்பிலான யூரோக்களைச் சுடச்சுட அச்சடித்து அவற்றைக் கொள்ளையடிப்பதே திட்டம். முதல் 2 சீஸனில் ‘ராயல் மின்ட்’ வளாகத்தில் நடக்கும் கொள்ளை சம்பவம், அதற்கடுத்த சீஸன்களில் இன்னொரு வங்கியின் தங்கக் கட்டிகளை குறிவைத்து நகரும். நடப்பது என்னவோ வங்கிக்கொள்ளை என்றபோதும், கொள்ளையர்களின் அணுகுமுறையும், அவர்களின் முன்கதையும், அவர்களுக்கு இடையிலான உறவுப் பாராட்டலும், தங்கள் கொள்ளையில் அவர்கள் வகுத்துக்கொண்ட நியாயங்களுமாக... ‘மனி ஹெய்ஸ்ட்’ கொள்ளையர் ரசிகர்களின் இதயங்களையே கொள்ளை கொண்டனர்.

நியாயமார் கொள்ளையர்

தங்கள் உயிர் மட்டுமன்றி பொதுமக்கள், போலீஸார் என எவர் உயிருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது உட்பட பல்வேறு கொள்கைகள் கொள்ளைக் கூட்டத்தில் வகுக்கப்படுகின்றன. பணயக் கைதிகளின் பாதுகாப்புக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள். அதேபோல அந்த வங்கிக் கொள்ளைகளுக்கும் தன்னளவில் ஒரு நியாயமான காரணத்தையும் புரொபசர் முன்வைத்திருப்பார். தன்னுடைய பெயர் உட்பட எவ்விதமான அடையாளங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளாத அவர், அதையே பின்பற்றுமாறு கொள்ளைக் கும்பலின் அனைவரையும் பணிப்பார். அதன்படி ஒருவர் பிடிபட்டால்கூட அடுத்தவர் தகவல்கள் கசியாத வகையில் டோக்கியோ, டென்வர், பெர்லின், ஓஸ்லோ என பிரபல நகரங்களின் பெயர்கள் கொள்ளையர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும்.

வித்தியாசமான ‘வாத்தி’

எப்பேர்பட்ட பூட்டையும் திறப்பவர், ஹேக்கிங்கில் வல்லவர், கரன்ஸி அச்சடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என நுணுக்கமான பணியாளர்களை கொள்ளைக்கூட்டத்தில் தேடி சேர்த்துக்கொள்ளும் புரொபசர், அவர்களை இயக்கும் மூளைக்காரராகச் செயல்படுவார். நிதானம் இழக்காத, வன்முறையை விரும்பாத, அதிர்ந்து பேசாத தன்மை கொண்டவர், எப்போதும் சதா சிந்தனையில் உழல்பவர் என அசப்பில் கல்லூரி ஆசிரியர் போன்றே தோற்றமளிப்பார். அவர் வகுக்கும் வியூகங்கள் அனைத்திலும் ஒன்று பிசகினாலும் ‘பிளான் பி’ திட்டங்கள் தயாராக இருக்கும்.

ரகசிய இடத்திலிருந்தபடி வங்கிக்குள்ளிருக்கும் தனது அணியை வழி நடத்துவார். களத்தில் எதிர்ப்படும் சிக்கல்கள், சவால்கள் அனைத்துக்குமே உடனடி விடை வைத்திருப்பார். அது மட்டுமன்றி, வங்கிக்கு வெளியே கூடாரமிட்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, கொள்ளையருக்கு அவசியமான தகவல்களை வெளியிலிருந்து சேகரிப்பது உள்ளிட்ட பணிகளையும் தொகுப்பார். தனது கவனத்தை ஒருமுகப்படுத்த, அவர் மேற்கொள்ளும் ஓரிகாமி படைப்புகளும் அவரது கதாபாத்திரத்தைத் தனித்துக் காட்டும்.

முத்தான முன்கதை

இதுவரை 4 சீஸன்கள் வெளியாகி உள்ளன. 2 சீஸனாக விரியும் ’ராயல் மின்ட்’ கொள்ளையின் நிறைவாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் கொள்ளைக் கூட்டம், சில ஆண்டுகளை மகிழ்ச்சியாகக் கழிக்கும். அவர்களில் ஓர் இளம் கொள்ளையர் போலீஸ் வலையில் சிக்க அவரை மீட்கும் பணய பேரத்துக்காகவும், புரொபசர் குடும்பக் கனவான இன்னொரு வங்கிக் கொள்ளைக்காகவும் ‘பேங்க் ஆஃப் ஸ்பெயின்’ தங்கக்கட்டிகளைக் குறிவைத்து அடுத்த கொள்ளைத் தாண்டவம் தொடங்கும்.

இதில் நீளும் 4-வது சீஸன் சென்ற வருடம் வெளியானது. பெண் இன்ஸ்பெக்டர் அலிசா சியாராவின் தனிப்பட்ட புலனாய்வில், ப்ரொபசர் துப்பாக்கி முனையில் வீழ்த்தப்படுவதுடன் அந்த அத்தியாயம் முடிந்திருக்கும்.

நிரப்பலில் நிகழ்கதை

தொடரின் நிறைவுப் பகுதியான 5-வது சீஸன் 2 தொகுதிகளைக் கொண்டிருக்க, அதில் முதலாவது தற்போது வெளியாகி இருக்கிறது. புரொபசரை மடக்கும் இன்ஸ்பெக்டர் அலீஸா தனது பாணியில் அவரை சித்ரவதை செய்யத் தொடங்க, அவரது திடீர் பிரசவ வலி எதிர்பாராத திருப்பமாகிறது. பிரத்யேக ராணுவக் குழு வங்கிக்குள் நுழைய, அந்த வளாகம் போர்க்களமாவதுடன் இந்த அத்தியாயங்களில் கொள்ளையர் கூட்டத்தில் 2 முக்கிய நபர்கள் பலியாகிறார்கள்.

புரொபசரின் காதலியும் முன்னாள் இன்ஸ்பெக்டருமான லிஸ்பன், போலீஸ் பிடியிலிருந்து வங்கிக்குத் தப்புவதை விறுவிறுப்பாக சொல்கிறார்கள். கதை என்று பெரிதாக இந்த அத்தியாயங்களில் நகராது போனாலும், சண்டைக் காட்சிகளில் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மெகா விருந்து படைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் திருப்பங்கள் அனைத்தும் டிசம்பர் அத்தியாயங்களில் காத்திருப்பதால், அதை நோக்கிய நகர்வாகவே தற்போதைய அத்தியாயங்களை ஆக்‌ஷனில் நிரப்பியிருக்கிறார்கள்.

போராட்டக்களம் - நிஜக் கொள்ளைகள்

கொள்ளைக் கும்பல் அணிந்திருக்கும் பிரபல ஓவியர் சல்வடோர் டாலியின் முகமூடி மற்றும் சிகப்பு சீருடை, அவர்கள் பாடும் இத்தாலி பழங்குடியின் புரட்சிகரப் பாடலான ‘பெல்லோ சாவ்’ என க்ரைம் ஆக்‌ஷன் கதையின் உள் அடுக்குகளில் ரசனையான கூறுகளும் நிறைந்திருப்பது இந்தத் தொடரின் தனித்தன்மை. மேலடுக்கில் க்ரைம் கதையாகத் தென்பட்டாலும், கூராயும்போது அதிகாரத்துக்கு எதிரான குறியீடுகளை நிறைய இடங்களில் உள்வாங்கலாம்.

தனது படைப்புகளின் வழியே சமூகத்தின் சரி தவறுகளைத் தொடர்ந்து விமர்சித்த டாலியின் முகமூடி அணிந்து, ‘பெல்லோ சாவ்’ பாடலைப் பாடியபடி உலகின் பல்வேறு போராட்ட களங்கள் புதுவடிவு எடுத்துள்ளன.

இதன் மறுபக்கமாய், திருச்சி நகைக்கடை கொள்ளை உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களும் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடர் பாதிப்பில் நடந்துள்ளன.

x