சேலம் வனக்கோட்டத்தில் 3.36 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி தொடக்கம்: பசுமைப் பரப்பை அதிகரிக்க திட்டம்!


சேலம்: பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், காப்புக் காடுகள் மற்றும் விளை நிலங்களில், வரும் மழைக் காலத்தில் நடுவதற்காக, சேலம் வனக்கோட்டம் சார்பில் 3,36,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டமானது, சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், தம்மம்பட்டி, கல்வராயன் உள்ளிட்ட வனச்சரகங்களுடன் மொத்தம் 5,245 ச.கி.மீ., வனப்பரப்பு கொண்டது. இந்நிலையில், மாவட்டத்தின் வனப்பரப்பை மேலும் அதிகரித்திட, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், சேலம் வனக்கோட்டம் சார்பில், வரும் மழைக் காலத்தில் வனப்பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில், வனத்துறையின் நாற்றுப் பண்ணைகளில் மொத்தம் 3,36,000 மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி கூறியதாவது: சேலம் வனக்கோட்டத்தில் உள்ள வனச்சரகங்கள் உள்பட 13 இடங்களில் உள்ள நாற்றுப் பண்ணைகளில் வேம்பு, நாவல், புளி, சந்தனம், தேக்கு, செந்சந்தனம் உள்ளிட்ட வகை மரக்கன்றுகள், உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் 1,20,000 மரக்கன்றுகளும், நபார்டு திட்டத்தின் கீழ் 22,500 மரக்கன்றுகளும் வனத் துறையின் நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ஊரக வளரச்சித் துறையின் நாற்றங்கால்களில் 1,82,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் வனக்கோட்டம் சார்பில் மொத்தம் 3,36,000 மரக்கன்றுகள் உற்பத்தி தொடங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மரக்கன்றுகள் வரும் மழைக்காலத்தின் போது வனப்பகுதிகளில் நடப்படுவதுடன், விவசாயிகளுக்கும் வழங்கப் பட்டு, விளை நிலங்களிலும் நட்டு பராமரிக்க ஊக்குவிக்கப்படும், என்றார்.

x