புதுச்சேரி: பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது தாவரவியல் பூங்கா. கடந்த 1826ம் ஆண்டில். அப்போதைய பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது இப்பூங்கா. இது இந்தியாவில் முக்கியமான சில தாவரவியல் பூங்காக்களில் ஒன்று. சிறார்களுக்கு, இயற்கையை புரிய வைக்கும் சிறந்த இடமாக இந்த தாவரவியல் பூங்கா திகழ்கிறது.
200 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜார்ஜஸ் கெரார்ட் சாமுவேல் பெரோட்டட்' என்பவரால் உருவாக்கப்பட்டது இப்பூங்கா. 22 ஏக்கர் பரப்பளவில் 3,500 மரங்களுடன் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்தப் பூங்கா அமைந்துள்ளது. நமது பகுதியில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா இதுதான்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோரின் விருப்ப பட்டியலில் இந்த தாவரவியல் பூங்காவுக்கும் இடமுண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இந்த தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணிகள் ரூ. 9.1 கோடியில் நடக்கத் தொடங்கியது. இதற்காக, கடந்தாண்டு பிப்வரி மாதம் முதல் தாவரவியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
தாவரவியல் பூங்காவின் நுழைவு வளைவை புதுப்பித்தல், டிக்கெட் கவுன்டர்கள், கழிப்பறைகளை புனரமைத்தல், வெளிப்புற ஜாக்கிங் டிராக், கண்ணாடி மாளிகை, புதிர் தோட்டம், ஆம்பி தியேட்டர் ஆகியவற்றை புதுப்பித்தல், செல்ஃபி பாயின்ட் அமைத்தல், வரைபடத்துடன் கூடிய சைகை பலகைகள் வைத்தல் ஆகியவை இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளில் அடங்கும்.
பூங்காவைச் சுற்றி பார்க்க வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 பேட்டரி கார்கள் மற்றும் புதிதாக பேட்டரியில் இயங்கும் ஒரு சிறுவர் உல்லாச ரயிலும் வாங்கப்பட்டு பூங்காவில் நிறுத்தப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா மூடப்பட்டதால், கடந்த கோடையில் சுற்றுலா பயணிகள், முக்கியமாக குழந்தைகள் கடும் ஏமாற்றமடைந்தனர். “கடந்தாண்டு ஜூன் மாதமே திட்டப் பணிகளை முடித்து திறந்து விடுவோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 14 மாதங்களை கடந்த பின்னரும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை முடித்து வேளாண்துறை வசம் தாவரவியல் பூங்கா ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனாலும் பூங்கா திறக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், பூங்காவில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த புதிய பேட்டரி கார்களில் மூன்றில், ஆடியோ செட்டுகள் திருடு போயுள்ளன. ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடித்து துறையிடம் தந்த பின்னரே இத்திருட்டு நடந்துள்ளதாக வழக்கை பதிவு செய்துள்ளதாக ஒதியஞ்சாலை போலீஸார் குறிப்பிடுகின்றனர். அதேபோல் குழந்தைகள் ரயில் செல்லும் தண்டவாளங்கள் துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சிறார் ரயிலை இயக்க ரயில்வே துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் தருவதில் தாமதம் நிலவுகிறது.
எவ்வளவு சிறப்பான ஒன்றாக இருந்தாலும், உரிய காலத்தில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது வீணாகி விடும். இதற்கு சமீபத்திய உதாரணமாக இருந்து வருகிறது புதுச்சேரி தாவரவியல் பூங்கா.