மதுரை ஒத்தக்கடை: கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் கால திருவிடையாட்ட கல் கண்டெடுப்பு!


மதுரை ஒத்தக்கடை யானைமலையின் பின்பகுதியில் உள்ள கொடிக்குளம் கிராமத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்கள் கால திருவிடையாட்டக் கல் கண்டறியப்பட்டுள்ளது.

கொடிக்குளம் கிராமத்தி்ல் உள்ள இந்த திருவிடையாட்டக் கல், 6 அடி நீளம், 1 1/2 அடி அகலத்துடன் முன்புறம் சக்கரமும், அதற்குக் கீழே 17 வரிகள் கொண்டதாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. அதில் பாண்டிய மண்டலத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான தென்பரப்பு நாட்டு திருமோகூர் என்று தொடங்கி, பெருமாள் கோயிலுக்கு திருவிடையாட்டம், திருநந்தவனம், திருப்பணிகளும் திருநாமத்தால் செய்வித்ததாக பொறிக்கப்பட்டுள்ளது. இதன் இடது பக்கத்தில் சக்கரமும், அதற்குக் கீழே வில் மற்றும் அம்புகளை வைக்கும் கூடையான அம்பறாத் தூணி போன்ற அமைப்பும் காணப் படுகிறது. இந்த கல்வெட்டை பற்றிய குறிப்புகள் திருமுருகூர் காலமாக பெருமாள் கோயில் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது.

இதுகுறித்து கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது: இக்கல்வெட்டு இருக்கும் கொடிக்குளத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் மலையாளத்தான்பட்டி, சோழபுரம், நெல்லியேந்தல் பட்டி போன்ற கிராமங்களிலும் இதேபோன்று திருஆழி கற்கள் காணப்படுகின்றன. அதில் 5 அடிக்கும் மேற்பட்ட திருஆழிகல் சோழபுரத்திலும், மலையாளத்தான்பட்டியிலும் இருப்பது இப்பெருமாள் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறிப்பதாகத் தெரிகிறது.

இதேபோன்று, திருஆழி கற்கள் மதுரையில் கப்பலூர், அந்தநேரி, சின்ன இலந்தைகுளம், பெருமாள்பட்டி, அருவிமலை, கல்லங்காடு, கருங்காலக் குடி உள்ளி்ட்ட பல பகுதிகளில் காணப்படுகிறது எனக் கூறினார்.

x