பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க புதுச்சேரியில் வீதி விளையாட்டு - குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்பு


புதுச்சேரி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக புதுச்சேரியில் நடந்த வீதி விளையாட்டில் ஆர்வமுடன் குழந்தைகள் இன்று பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்துமே உடல் நலம், மனநலம்,மொழி, பண்பாடு, கணிதம், வாழ்வியல், விடாமுயற்சி என அனைத்தையும் மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை.

ஆனால் இன்றைய குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டு மொபைல் கேம்களில் மூழ்கி மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வேறு திசையில் செல்கின்றனர். அத்துடன் வீதி விளையாட்டும் மறைந்து வருகிறது. கோடையில் வீதியில் வெயிலோடு விளையாடிய காலங்களை இக்காலத்தில் குழந்தைகள் ருசித்ததில்லை.

குறிப்பாக, நகரங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மறந்து போய் உள்ள நிலையில், பாரம்பரிய சங்கத்தினர் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். புதுவை நகரப் பகுதியில் ஒரு வீதியை தேர்ந்தெடுத்து அந்த வீதியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழாவாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாரம்பரிய வீதி விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திருவிழா போல் குழந்தைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தெரு முழுக்க நடந்த வீதி விளையாட்டு நிகழ்வில் பல்லாங்குழி, கோலிக்குண்டு, கண்ணா வளையல், பம்பரம், டயர் ஒட்டுதல், ஊஞ்சல், தாயம், ஆடுபுலி ஆட்டம், உறியடி என 15 பாரம்பரிய விளையாட்டுகள் ஈஸ்வரன் கோயில் வீதியில் களைகட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்துகொண்டு அந்த வீதியே திருவிழாபோல் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக விளையாடி மகிழ்ந்தனர்.

பங்கேற்ற குழந்தைகள், ''விளையாட ஜாலியாக இருந்தது. மொபைலில் விளையாடுவதை விட்டு எங்கள் நண்பர்களுடன் விளையாடியது சூப்பராக இருந்தது. கண்ணைக்கட்டி விளையாடியது, கோலிக்குண்டு, பம்பரம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி என பல விளையாடிகள் விளையாடினோம்'' என்றனர்.

x