குணமடைந்த தொழுநோயாளிகள் காசி தீர்த்த யாத்திரைக்கு உதவிய தெற்கு ரயில்வே!


மதுரை: ரயிலில் காசிக்கு செல்வதற்கு வெவ்வேறு பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்த குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே பெட்டியில் பயணிக்க தெற்கு ரயில்வே உதவியுள்ளது.

தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மடமும், சக்‌ஷம் அமைப்பும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக மருத்துவ உதவி வழங்கி வருகிறது. இதன் பலனாக பலர் குணம் அடைந்துள்ளனர். பலருக்கு நோயின் வீரியம் குறைந்துள்ளது. இவர்களில் சிலர் மேலும் காயமடையாமல் இருக்க அவர்களுக்கு மதுரை பாலரங்காபுரத்திலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சுயமாக சிறு தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு தொழுநோயிலிருந்து குணமடைந்து சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிய சிலர் காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினர். தீர்த்த யாத்திரை செல்ல விரும்பியவர்கள் ரயிலில் முன்பதிவு செய்தனர். ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது, பயணியின் வயதுக்கு ஏற்ப தானாகவே இருக்கைகள் ஒதுக்கப்படும்.

அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்த ஒவ்வொருக்கும் வேறு வேறு பெட்டிகளில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் குணமடைந்த தொழுநோயாளிகள் சாதாரண பயணிகளுடன் இணைந்து ரயிலில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து காசி தீர்த்த யாத்திரைக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் ஒரே பெட்டியில் பயணம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு தெற்கு ரயில்வேக்கு சக்ஷம் அமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த ரயிலில், வழக்கமான எண்ணிக்கையை விட கூடுதல் டிக்கெட் பரிசோதர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 31 பேரும் ஒரே பெட்டியில் பயணம் செய்வதற்காக ஒரு பெட்டியை தேர்வு செய்து, அந்தப்பெட்டியில் முன்பதிவு செய்திருந்தவர்களிடம் விபரத்தை எடுத்துச்சொல்லி குணமடைந்தவர்கள் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு பெட்டிகளில் இருக்கை முன்பதிவு செய்திருந்த தொழுநோயால் குணமடைந்தவர்களுக்கு ஒரே பெட்டியில் இருக்கை ஒதுக்கப்பட்டு மதுரையிலிருந்து சென்னை- வாரணாசி பிரயாக்ராஜ் வரை பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு உதவி செய்ய 2 உதவியாளர்களும் அந்த பெட்டியில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே பெட்டியில் பயணம் செய்தவர்கள் இன்று பத்திரமாக வாரணாசி பிராயக்ராஜ் சென்றடைந்தனர்.

இது குறித்து சக்‌ஷம் அமைப்பினர் கூறுகையில், ரயிலில் ஒரு ஒட்டு மொத்த குழுவையும் ஒரே பெட்டியில் பயணிக்க வைப்பதும், அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதிப்பது என்பது சிரமமான காரியம். தொழுநோயால் குணமடைந்தவர்கள் தனித்தனியே ரயிலில் எடுத்திருந்த பயணச்சீட்டுகளை தொகுத்து, எவ்வித சங்கடமும் இன்றி ஏற்கனவே பயணச்சீட்டு எடுத்திருந்த பிற பயணிகளின் அனுமதியோடு ஒரே பெட்டிக்கு மாற்றி அவர்களின் நெடுந்தூார பயணத்துக்கு ரயில்வே நிர்வாகம் உதவியுள்ளது.

இவர்கள் அனைவரையும் தனித்தனியே பயணிக்க வைக்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் துணையாகவும் இருந்து இவர்கள் காசி வரை போய் திரும்பும் வரையில் ஒரே பெட்டியில் பயணிக்குமாறு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ரயில்வே செய்தது மிகப்பெரிய காரியம். தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை உணர்ந்து இப்படி ஒரு அருமையான பயண ஏற்பாடு செய்த தெற்கு ரயில்வே எவ்வளவு பாராட்டினாலும் தகும். எல்லா சட்டங்களும் மக்களின் நலன் குறித்தனவே என்பதை இந்திய ரயில்வே நிரூபித்துள்ளது என்றனர்.

x