Fatty liver: கொழுப்புக் கல்லீரலுக்கு காரணங்களும், தடுப்பு வழிகளும்!


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்து வைப்பது கல்லீரல். அவசரத்துக்கு உடலுக்குச் சக்தியை வழங்க இயற்கை தந்திருக்கும் ஏற்பாடுதான் இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒரு கட்டத்தில் கல்லீரலுக்கு எதிரியாகிவிடுகிறது என்பதையே இங்கே கவனிக்க வேண்டும்.

உணவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்து, உடற்பருமனைக் கட்டுப்படுத்தினால் கொழுப்புக் கல்லீரல் வராமல் தடுக்கலாம். இல்லையென்றால், தான் சேகரித்த கொழுப்பை ஆரம்பத்தில் இடுப்புக்கும் தொடைக்கும் சளைக்காமல் அனுப்பும் கல்லீரல், ஒரு கட்டத்தில் அலுத்துப் போய், தன்னிடமே வைத்துக்கொள்ளும். அப்போதுதான் ‘கொழுப்புக் கல்லீரல்’ தலைகாட்டும். ஆம், கல்லீரலில் கொழுப்புப் படிவதையே ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver) என்கிறோம்.

இந்தப் பிரச்சினைக்கு, மிக முக்கியக் காரணியாக இப்போது வளர்ந்து வருவது, மன அழுத்தம். நீங்கள் ஆரோக்கிய உணவைத்தான் சாப்பிடுகிறீர்கள். துரித உணவை நினைத்துப் பார்ப்பதே இல்லை. உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறீர்கள். மதுவைத் தொடுவதில்லை. என்றாலும், கடுமையான மன அழுத்தம் இருக்கிறது என்றால், நீங்கள் அழைக்காமலேயே வந்துவிடும் கொழுப்புக் கல்லீரல்.

அதாவது, மன அழுத்தம் காரணமாகச் சில ஹார்மோன்கள் அதீதமாகச் சுரந்து, காய்ச்சி ஆறவைத்த பாலில் ஆடை கட்டுவதைப் போல் கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்துவைக்கும் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள். அதேபோல், இந்தப் பிரச்சினைக்கு அடுத்த முக்கிய காரணம், நீரிழிவு. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

கொழுப்பின் காரணமாகக் கல்லீரலில் சேர்ந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக அறிவதற்கு என்சைம் பரிசோதனைகள் இருக்கின்றன. அத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ‘கல்லீரல் திசு ஆய்வு’ ஆகியவை கைகொடுக்கின்றன. ‘ஃபைப்ரோஸ்கேன்’ எனும் நவீன சோதனையும் இப்போது வந்துள்ளது. இதன் மூலம் நோயைக் கணித்து வாழ்க்கை முறையை மாற்றங்கள்.

மதுவை நிறுத்துதல், தகுந்த மாத்திரை, மருந்துகள், ‘வைட்டமின் இ’ கலந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள், உணவில் கவனம் போன்றவற்றால் கொழுப்புக் கல்லீரலைக் கட்டுப்படுத்திவிடலாம். மது அருந்துவதை நிறுத்தாமலும், உணவில் கவனம் செலுத்தாமலும் இருந்தால், கொழுப்புக் கல்லீரல் இரண்டாவது கட்டத்தில் இருந்து இறுதிக் கட்டத்துக்குத் தாவிவிடும். அப்போது உயிருக்கு ஆபத்து வரக்கூடும்.

தடுப்பு வழிகள் என்னென்ன? - மது அருந்தும் பழக்கம் இருப்பின், அதை உடனடியாக கைவிட வேண்டும். உடல் எடையைச் சரியாகப் பேண வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் முதலியவற்றை குறைத்துக் கொள்வீர். நொறுக்குத் தீனி கூடாது. கீரைகள், பழங்கள், காய்கறிகளை தேவைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒமேகா 3 சத்துள்ள மீன் உணவு நல்லது.

தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் 6 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம். நீரிழிவை கட்டுப்படுத்துவீர். சர்க்கரை கட்டுக்குள் இல்லாவிட்டால் ‘முதல்கட்ட கொழுப்புக் கல்லீரல்’ (Grade I Fatty Liver)-ஐ தடுக்க முடியாது என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.

x