விவசாயிகள் மகிழ்ச்சி... ஓசூரில் கைகொடுக்கும் 'ப்ளூ டெய்சி’ மலர் சாகுபடி!


கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீர் மாசடைந்துள்ள நிலையில், ஓசூர் அருகே பாகலூர் பகுதி விவசாயிகளுக்கு ப்ளு டெய்சி அலங்கார மலர் சாகுபடி கைகொடுத்து வருகிறது. இச்சாகுபடிக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கம் மலையிலிருந்து உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழகத்துக்குள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் கொடியாளம் கிராமத்தின் வழியாக நுழைந்து கெலவரப்பள்ளி அணைக்கு வந்து அங்கிருந்து கிருஷ்ணகிரி அணைக்குச் செல்கிறது. கொடியாள ம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மூலம் பாகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பாகலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் பீன்ஸ், முட்டை கோஸ், காலி ஃபிளவர், தக்காளி மற்றும் கீரை வகை பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர். மேலும், சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் நேரடியாக தென் பெண்ணை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்துக்கு வரும் தென் பெண்ணை ஆற்று நீர் துர்நாற்றத்துடன் மாசடைந்த நிலையில் வருகிறது. இந்நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் போது, பயிர் மற்றும் மண் வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்நீரில் சாகுபடி செய்யப்படும் நெல், காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் உணவுக்குத் தகுதி இல்லாதவை யாக கருதப்படுகிறது.

இதனால், இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத அலங்கார மலர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக ப்ளூ டெய்சி மலர் அதிக பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மலர் சாகுபடிக்கு ரசாயனம் கலந்த தென்பெண்ணை ஆற்று நீர் கைகொடுத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீர் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நீரில் சாகுபடி செய்யும் நெல்லின் கிடைக்கும் அரிசியைச் சமைத்தால் 2 மணி நேரத்தில் சாதம் கெட்டுவிடுகிறது. அதேபோல, காய்கறி பயிர்களில் மகசூல் பாதிக்கப்படுகிறது. மொத்தத்தில் விவசாயம், கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த நீர் தீமையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத அலங்கார மலர் சாகுபடியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். மாசடைந்த நீர் ப்ளூ டெய்சி மலர் சாகுபடிக்கு உதவி வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மலர் ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குத் தினசரி 5 ஆயிரம் கட்டு (ஒரு கட்டுக்கு 20 செடிகள் ) மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் 20 ஆயிரம் கட்டுகள் வரை செல்கின்றன. ஒரு கட்டு மலர் ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் ப்ளூ, மஞ்சள், வெள்ளை ஆகிய டெய்சி ரக மலர்களைச் சாகுபடி செய்து வருகிறோம்.

மேலும், தென்பெண்ணை ஆற்று நீர் பாசனப் பகுதியில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்த மலர் சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு இல்லை. இதனால், நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்து வருகின்றனர். எனவே, அலங்கார மலர் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதுடன், இம்மலர் சாகுபடியை ஊக்குவிக்க மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x