சர்க்கரை நோயாளிகளுக்கு மதுப் பழக்கம் இருந்தால்..? - சில அலர்ட் குறிப்புகள்


மது அருந்துவதால் ஏற்படும் உடலநலத் தீமைகள் ஏராளம் என்பது சொல்லித் தெரிவதில்லை. தீவிர மதுப் பழக்கத்தால் கல்லீரல், கணையம், இரைப்பை ஆகியவை கெடுவது தொடங்கி புற்றுநோய் பாதிப்பு வரை பல ஆபத்துகள் உள்ளன.

குறிப்பாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஆல்கஹாலில் உணவு கலோரிகள் அதிகம்.

100 மி.லி. பீர் அல்லது ஒயினில் 150 கலோரி இருக்கிறது. ஒரு ‘காக்டெய்ல்’ பார்ட்டியில் குறைந்தது 500 கலோரி அதிகரித்துவிடும். மதுவோடு சோடா அல்லது செயற்கைச் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள் கலக்கப்படும்போது, கலோரிகள் இன்னும் அதிகரித்து விடும்.
இந்தக் காரணங்களால் உடல் பருமன் ஏற்படும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை (Insulin resistance) அதிகப்படுத்தும். அப்போது சந்தடியில்லாமல் சர்க்கரை நோய் வந்துசேரும்.

ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோய் மாத்திரைகளோடு ஆல்கஹால் விரோதிபோல் வினைபுரியும். அப்போது, அந்த மாத்திரைகள் செயலிழக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்குத் தாமதமாகும். சில நேரம் சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் போகும். இதனால், ரத்தக் குழாய்களில் உள்காயங்கள் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி தேடும் என்றும் பொதுநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எவருமே மது அருந்தக் கூடாது என்றாலும், மதுவை கட்டாயம் தொடவே கூடாதோர் என மருத்துவர்கள் இடும் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்:

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள். ஆஸ்பிரின், ‘ஸ்டாடின்’ மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள். இரைப்பைப் புண், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள்.

குடும்ப வரலாற்றில் இதயநோய் உள்ளவர்கள். இதயநோயாளிகள். இதயத் துடிப்பில் பிரச்சினை உள்ளவர்கள். ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.

கல்லீரல், கணையம் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver), ‘கல்லீரல் சுருக்க நோய்’ (Liver cirrhosis), கல்லீரல் செயலிழப்பு, கணைய அழற்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் மதுவைத் தொடவே கூடாது!

x