சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் உதகை ஏரியின் கழிவுகள்; சுற்றுலா பயணிகள் அவதி


நீலகிரி: தூர் வாரப்பட்டு வரும் உதகை ஏரியின் கழிவுகள் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய சுற்றுலா தலமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823ல் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சேரிங்கிராஸ் முதல் காந்தல் முக்கோணம் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டது. பின்னர் காலப் போக்கில் உதகை நகரில் கட்டப்படும் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக உதகை ஏரியில் கலக்கிறது.

கோடப்பமந்து கால்வாயில் இருந்து அடித்து வரப்பட்ட மண், செடி மற்றும் கொடிகள் உதகை ஏரியில் நிரம்பியது. கடந்த 2018ம் ஆண்டு ஏரியை தூர்வாரும் பணி நடந்தது. ஏரியில் மண் சகதி மற்றும் ஆகாயத்தாமரை படர்ந்ததால், உதகை ஏரியை தூர்வார திட்டமிடப்பட்டது. இதற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தூர்வாரும் பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

18 மாதங்கள் ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த 5 மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் தூர் வாரும் பணி தொடங்கினாலும், மிகவும் மெதுவாக பணி நடக்கிறது. அமைச்சர்கள், ஆய்வுக்குழுக்கள் வரும் போது மட்டும் தூர் வாரும் பணி துரிதப்படுகிறது. பின்னர் மீண்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஏரியில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் யாரும் வாங்காததால், லாரிகள் மூலம் கழிவுகள் உதகை நகராட்சி குப்பை தளத்தில் கொட்டப்பட்டு வந்தது. உதகையிலிருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் குப்பை தளம் உள்ளதால், கழிவுகள் வழியிலேயே கொட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஏரியிலிருந்த குழாய் அமைத்து ஏரியின் மறுபுறம் உள்ள சதுப்பு நிலத்தில் கழிவுகள் கொட்டப் பட்டு வருகின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சதுப்பு நிலத்தில் ஏரியின் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து நெஸ்ட் அமைப்பின் நிறுவனர் சிவதாஸ் கூறும் போது, ”ஏரிக்கு தூய்மையான நீர் வழங்கும் சதுப்பு நிலத்தில் ஏராளமாக நீர்வாழ் பறவையினங்கள் உள்ளன. மழை காலங்களில் வடிகால்வாயாக இந்த நிலம் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில், ஏரியை தூர் வாரி கழிவுகளை கொட்டுவதால், சதுப்பு நிலம் தரிசு நிலமாக மாறும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நீர் வாழ் பறவையினங்களின் வசிப்பிடம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x