மதுரை: பேரையூர் அருகே சதுரகிரி மலைக்குச் செல்லும் மலைப் பாதையில் ‘இலங்கை ஐந்து வளையன்’ என்ற அரிய வகை வண்ணத்துப் பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை இயற்கைப் பண்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச.குமரேசன் சந்திரபோஸ் கூறியதாவது; கடந்த மாதம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாளில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வாழைத்தோட்டம் மலைப் பாதை வழியாக சதுரகிரி மலைப் பாதையில் இலங்கை ஐந்து வளையன் (Sinhalese five-ring) வண்ணத்துப் பூச்சி இருப்பதை எங்கள் குழு ஆவணப்படுத்தியது. இந்த ஐந்து வளையன் வண்ணத்துப் பூச்சியானது இலங்கை மற்றும் தீபகற்ப தென்னிந்தியப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை உயிரினமாகும்.
இவை புல்வெளிகள் நிறைத்த மலைப் பகுதிகளில் காணப்படும். கோவை, ஈரோடு மாவட்ட வனப்பகுதியிலும், மேகமலை வனப்பகுதியிலும் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதே சதுரகிரி மலைப் பாதையில் கடந்த மாத இறுதியில் மஞ்சள் கறுப்புச் சிறகன் (Common Lascar), வரி ஐந்து வளையன் (Striated Five Ring), மலபார் புள்ளி இலையொட்டி (Malabar Spotted Flat), சிறு கருமஞ்சள் துள்ளி (Smaller Dartlet), மர பழுப்பன் (Common Treebrown), பெருங்கண் புதர் பழுப்பு வண்ணத்துப் பூச்சி (Glad eye bush brown) உள்ளிட்ட 52 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆவணம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
சதுரகிரி மலை ஆன்மிக தளம் மட்டுமல்ல, அது ஒரு பல்லுயிரிய வளம் நிறைந்த பசுமைத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகை வண்ணத்துப் பூச்சிகளை எங்கள் குழுவினர் ஆவணப்படுத்தி உள்ளனர். வண்ணத்துப்பூச்சிகளுக்கும், இயல் தாவரங்களு க்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவை, அதன் முக்கியத்து வத்தை மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இயல் தாவர வண்ணத்துப் பூச்சிகள் பூங்கா ஒன்றை மதுரையில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.