இ-சிகரெட் நல்லதா, கெட்டதா? - சில அலர்ட் குறிப்புகள்


நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன என்றாலும், புகைப் பிடிப்பவரின் மன உறுதிதான் இதற்குரிய அவசிய மருந்து ஆகும்.

‘சிகரெட்டுக்கு மாற்று’ என்கிற போர்வையில் புகுந்துள்ள இ-சிகரெட் புகைப்பழக்கம் இப்போது சிலரிடம் அதிகரித்து வருகிறது. இது பயனற்றது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.

ஏனெனில், இ-சிகரெட்டில் 16 மி.கி. வரை நிகோட்டின் இருக்கிறது. இதயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்த இந்த அளவே ஒரு விஷம்தான் என்கின்றனர். குறிப்பாக, இதில் கலக்கப்படும் பலவித ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் கண்ணிவெடிகள் என்பதால் இ-சிகரெட் பக்கம் மறந்தும் செல்லாதீர்கள்.

மன உறுதியுடன் புகைப்பதை நிறுத்தினால் வரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

> உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குள், உங்கள் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் குறையும்.

> புகைப்பதை நிறுத்திய 12 மணி நேரத்திற்குள், ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

> புகைப்பதை நிறுத்திய 2 முதல் 12 வாரங்களுக்குள், உங்கள் ரத்த ஓட்டம் மேம்படும்; நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

> புகைப்பதை நிறுத்திய 1 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு, இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, களைப்பு போன்றவை குறையும்.

> புகைப்பதை நிறுத்திய 1 வருடத்தில், மாரடைப்புக் கான உங்கள் ஆபத்து பாதியாகக் குறைந்திருக்கும்.

> புகைப்பதை நிறுத்திய 5 வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் என்பது புகைப் பிடிக்காதவர்களுக்கு உள்ளதுபோல் குறைந்திருக்கும்.

> புகைப்பதை நிறுத்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் பாதியாகக் குறைந்து விடும்.

> புகைப்பதை நிறுத்திய 15 வருடங்களுக்குப் பிறகு, மாரடைப்புக்கான சாத்தியம் என்பது புகைப் பிடிக்காதவர்களுக்கு இருப்பதைப் போலவே மாறியிருக்கும்.

x