திருப்பத்தூர் வேட்டங்குடி சரணாலயத்தில் 120 இனங்களைச் சேர்ந்த 10,000 பறவைகள்!


இந்திய பொன்னுத்தொட்டான் (அ) இந்திய தோட்டக்கள்ளன்

திருப்பத்தூர்: வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 120 இனங்களைச் சேர்ந்த 10,000 பறவைகள் இருப்பது வனத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமையில் வனப்பாதுகாவலர் மலர்கண்டன் முன்னிலையில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பறவைகள் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் என 120 பேர் பங்கேற்றனர்.

தேன் பருந்து

முதல் கட்டமாக மார்ச் 9-ம் தேதி ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள பெரிய கொள்ளுக்குடிப்பட்டி, சிறிய கொள்ளுக்குடிப்பட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்கள் உட்பட மாவட்டத்தில் 25 கண்மாய்களில் கணக்கெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக மார்ச் 16-ம் தேதி நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 25 காப்புக்காடுகள், காப்புநிலங்களில் கணக்கெடுக்கப்பட்டது.

இந்திய அரசவால் ஈப்பிடிப்பான்

இந்த கணக்கெடுப்பில் வேட்டங்குடி பறவைகள் சரணாயலத்தில் 120 இனங்களில் 10,000 நீர்ப்பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் இருப்பது தெரியவந்தது. தேன் பருந்து, இந்திய அரசவால் ஈப்பிடிப்பான், சிவப்பு தலை தூரிகை, பொரிப்புள்ளி ஆந்தை, இந்திய பொன்னுத்தொட்டான் (அ) இந்திய தோட்டக்கள்ளன் பறவை இனங்கள் புதிதாக கண்டறியப்பட்டன.

பொரிப்புள்ளி ஆந்தை

ஏற்பாடுகளை திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 514 பறவைகள் இருப்பது தெரிய வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த மழை பெய்ததால் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

x