தேனி: கம்பம் அருகே சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை பழங்கள் மகசூல் பருவத்துக்கு வந்துள்ளன. இதை உண்பதற்காக வவ்வால், கிளி உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. பாதிப்பை தடுக்க திராட்சை கொடிகளின் மேல்பகுதியிலும் வலை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியானது, தமிழக - கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பிரத்யேக காலநிலை இங்கு நிலவுவதால், கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் ஆண்டு முழுவதும் விளைகின்றன. குறிப்பாக, திராட்சை விளைச்சலுக்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுவதால், அதிகளவில் திராட்சை பயிரிடப்படுகிறது.
சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு திராட்சை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுக்கு ஒருமுறையே மகசூல் இருந்து வரும் நிலையில், இங்கு ஆண்டு முழுவதும் திராட்சை விளைந்து வருகிறது. இதனால், இந்த திராட்சைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு விளையும் திராட்சைகள் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகின்றன.
தற்போது கவாத்து செய்யப்பட்டு, திராட்சை கொடிகள் மகசூல் பருவத்தை அடைந்துள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பூ, காய், பழம் என்று அடுத்தடுத்த பருவநிலையில் உள்ளன. சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதியைப் பொருத்தளவில், திராட்சைகள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், கொத்து கொத்தாக விளைந்துள்ள இதை உண்பதற்காக வவ்வால், அணில், கிளி, குருவி உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. மகசூல் நேரத்தில் பறவைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, திராட்சை கொடிகளுக்கு மேற்புறம் முழுவதும் வலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயி செல்வகுமார் கூறுகையில், ‘பலன் தரும் நேரத்தில் திராட்சைகளை குறிவைத்து வவ்வால் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன. எனவே, வலை அமைத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அருகில் உள்ள சுருளிமலையில் குரங்குகள் அதிகம் இருந்தாலும், இப்பகுதிக்கு வருவதில்லை. இருப்பினும், பகலிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.