பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக குறைந்ததால், அணை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம், தார் சாலை ஆகியன வெளியே தெரிகின்றன. இவற்றை வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி உயரம் கொண்டது. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், ஆனைமலை தாலுகாவில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து அணைக்கு விநாடிக்கு 423 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணை கட்டுவதற்கு முன்பு வால்பாறைக்கு செல்வதற்காக, ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆழியாறில் இருந்து பாராளை வழியாக சிறு குன்றாவுக்கு 1903-ம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் குறுக்கே சிற்றாறு சென்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் படாமல், இருக்க கல் பாலம் அமைக்கப்பட்டது. ஆழியாறு அணை கட்டப்பட்ட பின்னர், அணையில் நீர் தேங்கும் போது இந்த தார் சாலையும், கல் பாலமும் நீரில் மூழ்கி விடுவதும், அணையின் நீர்மட்டம் குறையும்போது தண்ணீருக்கு வெளியே தெரிவதும் வழக்கம்.
தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியாக குறைந்ததால், கல் பாலமும், தார் சாலையும் நீர்மட்டத்துக்கு வெளியே தெரிகின்றன. இவற்றை வால் பாறைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் சாலையோரம் நின்று ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். பிஏபி அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.