நாம் அருந்தும் பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 6 சதவீதம் வரை, புரதம் 3 முதல் 4 சதவீதம் வரை, தண்ணீர் 85 முதல் 88 சதவீதம் வரை, தாதுகள் 0.7 சதவீதத்துக்குக் குறைவாக, சர்க்கரை ஐந்து சதவீதத்துக்குக் குறைவாக உள்ளன.
பாலிலுள்ள கொழுப்புச் சத்தானது கிளிசரைடு எனும் கொழுப்பாக உள்ளது. அதோடு மொத்தம் 64 வகைக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. சிறிதளவு பாஸ்போ லிபிட், கரோட்டினாய்டு ஆகிய சத்துகளும் உள்ளன. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைத் தரக்கூடிய இம்யூனோகுளாபுலின்களும் பாலில் உண்டு.
பாலில் குளுகோஸ், கேலக்டோஸ் சர்க்கரைகளின் கலவை உள்ளது. பாலின் இனிப்புச் சுவைக்கு இதுதான் காரணம். இது உணவுச் செரிமானத்துக்கு மிகவும் அவசியமான ஒரு சர்க்கரைப் பொருள். பாலில் வைட்டமின்-ஏ, பி1, பி2, சி, டி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகளும் உள்ளன.
பால் ஒரு சத்துப்பொருள்தான் என்றாலும், பல வகை பாக்டீரியா வளர்வதற்கான சிறந்ததொரு ஊடகமாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் அதைக் கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடித்தால் இந்த ஆபத்தும் மறைந்துவிடுகிறது.
பாலின் கொதிநிலை 100.2 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பத்தில் பாலை சுமார் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள அனைத்து பாக்டீரியாவும் இறந்துவிடும். அதன்மூலம் பால் சுத்தமாகும்.
விலங்கினப் பால்களில் காசநோய்க் கிருமிகளும், டைபாய்டு கிருமிகளும் இருக்குமானால், அந்தப் பாலைக் காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு இந்த இரண்டு நோய்களும் ஏற்பட்டுவிடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
பாலைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும்போது பாக்டீரியா இறந்து விடும் என்பதால், இந்த இரு நோய்களும் வருவதற்கான வாய்ப்பும் குறைந்துவிடுகிறதாம்.