தேனி: தொழிலாளர்கள் பற்றாக்குறை, பஞ்சு விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இலவம் மரங்களில் காய்களை பறிக்காமலேயே விவசாயிகள் விட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு, வாலிப்பாறை, குமணன்தொழு, காந்திகிராமம், பொன்னன்படுகை, வீரசிங்கம்மாள்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இலவம் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி, மார்ச் மகசூல் பருவமாகும். ஒரு மரத்தில் சராசரியாக 200 கிலோ பஞ்சு கிடைக்கும்.
தற்போது மரங்கள் மகசூல் பருவத்தில் உள்ளன. பல இடங்களிலும் இலவம் பட்டைகள் காய்ந்து வெடித்து பஞ்சு வெளியேறும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் இவற்றை சேகரிப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் இருந்து வருகிறது. இதனால் ஏராள மான மரங்களில் இலவம் காய்கள் வெடித்து பஞ்சுகள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், தொழிலாளர்களுக்கான கூலி அதிகரித்து விட்டது. ஆனால் பஞ்சு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150 வரை விற்ற பஞ்சு படிப்படியாக குறைந்து தற்போது ரூ.50-க்கு விற்பனையாகிறது. இதனால் நஷ்டம் ஏற்படும் நிலையே உள்ளது. எனவே, இலவம் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு வேறு பயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வருசநாடு, பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் இலவம் பஞ்சுகள் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் விலையை குறைத்து வருகின்றனர். இதனால் செயற்கை விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.