உலகம் முழுவதும் மக்கள் பெரிதும் அஞ்சும் நோய்களுள் ஒன்றுதான் ‘ரேபிஸ்’ (Rabies). ரேபிஸ் நோய்க்கு மருந்தே இல்லை என்பதால் மரணம் நிச்சயம்.
தமிழகத்தில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது கண்கூடு. மாநிலம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் கடியால் தினமும் குழந்தைகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில், கிட்டத்தட்ட 35 பேர் ‘ரேபிஸ்’ எனும் வெறிநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தரவுகள் கூறுகின்றன. எனவே, ரேபிஸ் குறித்த அடிப்படை புரிதல்களும், தடுப்பு முறைகள் பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரேபிஸ் என்றால் என்ன? - ‘ரேபிஸ்’ (Rabies) எனும் வைரஸ் கிருமிகள் வெறிநாயின் எச்சிலிலல் இருந்து வெளியேறும். அந்த நாய் மனிதரைக் கடிக்கும்போது, கிருமிகள் உடலுக்குள் புகுந்து, மூளைத் திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். வெறிநாய் சிறிய அளவில் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம்.
வெறிநாய் கடித்த 5 நாட்களுக்குப் பிறகு ஆறு ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி வரும். உணவு சாப்பிட முடியாது. இவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.
தடுப்பூசியே ஒற்றைத் தீர்வு: நாய் கடித்தவருக்கு, கடித்த நாள், 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என 5 தவணைகள் தடுப்பூசி போடப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே போடப்படுகிறது. உரிய நேரத்தில் முறைப்படி போட்டுக்கொண்டால், ரேபிஸ் நோய் வருவதில்லை. உயிரிழப்பு ஏற்படுவதில்லை. இது தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
ரேபிஸ் தடுப்பூசி - சில முக்கியக் குறிப்புகள்: ரேபிஸ் நோயைக் குணப்படுத்துவதற்கு உரிய சிகிச்சைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் மருத்துவர்கள் தடுப்பூசி போடுவதன் வழியாக, ரேபிஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.
ரேபிஸ் தடுப்பூசி எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்கிறது என்பதை மனதில்கொண்டு, நாய் கடித்தவுடன் மருத்துவரின் ஆலோசனைப்படி, ரேபிஸ் தடுப்பூசியை நான்கு அல்லது ஐந்து தவணைகளையும் தொடர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
நாய் கடித்தால் ‘தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும்’ என்கிற கட்டுக்கதையை நம்ப வேண்டாம். ரேபிஸ் தடுப்பூசி கைகளில்தான் போடப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் குழந்தைகளுக்கு மட்டும்தான் தடுப்பூசி வழக்கத்தில் இருந்தது. தற்போது இளம் வயதினர், முதியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இருக்கிறது.