உலக சிட்டுகுருவி தினம் கொண்டாடும் நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஓட்டுநர் 100-க்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகளுக்கு தண்ணீர், உணவளித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே பழைய குட்ஷெட் தெருவைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் (61). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி தேன்மொழி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன், சிட்டுகுருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக நாளிதழ்கள் மூலம் நாச்சியப்பன் அறிந்து கொண்டார். இதையடுத்து தனது வீட்டின் முன் உள்ள மரங்களில் அமரும் சில சிட்டுக் குருவிகளுக்கு தண்ணீர், உணவளிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து தொடர்ந்து 7 ஆண்டுகளாக சிட்டுக் குருவிகளுக்கு தண்ணீர், உணவு வைத்து வருகிறார். மேலும் அவை வந்து அமர்ந்து செல்வதற்காக கூடுகளையும் அமைத்துள்ளார். தற்போது 100-க்கும் மேற்பட்ட குருவிகள் வந்து செல்கின்றன. நாச்சியப்பன் இல்லாத நேரங்களில் அவரது மனைவி தண்ணீர், உணவளிக்கிறார். மேலும் பட்டாசு வெடிப்பது போன்ற பலத்த சத்தம் ஏற்படும் விஷயங்களை தவிர்த்து குருவிகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இது குறித்து நாச்சியப்பன் கூறியதாவது: அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகளுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். அவற்றுக்கு தண்ணீர், உணவு வைத்தேன். முதலில் சில குருவிகள் மட்டுமே வந்தன. அது படிப்படியாக உயர்ந்து காலை, மாலை இருவேளைகளில் 100-க்கும் மேல் தினமும் வருகின்றன. அவை அமர்ந்து தண்ணீர் அருந்தவும், உணவு உண்ணவும் தேவையான ஏற்பாடு செய்துள்ளேன்.
மாதத்துக்கு 10 கிலோ வரை திணை, கம்பு போன்றவற்றை வாங்கி உணவாக அளிக்கிறேன். குருவிகளின் சத்தம் எனக்கு மன அமைதியை தருகிறது. தற்போது குருவிகளை ஒருநாள்கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவை என்னோடு ஒன்றிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.