சரியான உணவு முறையைப் பின்பற்றாததால் வரும் பிரச்சினைகளில் முக்கியமானதுதான் மலச்சிக்கல். இப்பிரச்சினையில் இருந்து மீள்வது, தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுநல மருத்துவர்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ் இங்கே...
“சரியான உணவுமுறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90% குறைந்துவிடும்.
நாம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு தானிய உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். குறிப்பாக, தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரை போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.
தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள், காபி, தேநீர், மென்பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.
இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகள் கூடவே கூடாது. இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதேநேரத்தில் மலம் வெளியேறிவிடும். பலருக்கும் மலச்சிக்கலை சரி செய்தாலே வாயுப் பிரச்சினையும் சரியாகிவிடும் என்பதையும் கவனிக்க வேண்டும்” என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.