‘தமிழர்களின் மிக நீண்ட கலாச்சாரம் உலகுக்கு தெரியவரும்’ - பட்டினமருதூர் தொல்லியல் ஆய்வுக்கு வரவேற்பு!


தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: கீழப்பட்டினம் என்ற கயல்பட்டினம் தொடர்பாக கடந்த 2022-ல் ஆராய்ச்சி செய்து, அதுகுறித்த புத்தகம் வெளியிட்டோம். மேலும், பழங்கால தொன்மையான வரைபடங்கள் கீழப்பட்டினம் என்பது பட்டினமருதூருக்கு தெற்கே தருவைகுளம் இருக்கும் இடத்தை குறிப்பிட்டிருந்தது. கீழப்பட்டினம் மாபெரும் தொல்லியல் களமாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதி மக்கள் உதவியோடு கள ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது தங்கம் கலந்த நாணயங்கள் கண்டெடுத்தோம். தொடர்ந்து, தெய்வங்கள் சிலைகள், சங்குகளின் ஆபரணத் துண்டுகள், ரூபி படிவம், இரும்பு வார்ப்பு கழிவுகள், மணல் கலவையால் செய்யப்பட்ட கட்டமைப்புகள், சிற்பங்கள், பழமையான கிணறு, சுழல், ஒற்றை மீன் சின்னத்தின் முத்திரையுடன் கூடிய வெள்ளை நிற எடை கல், மணல் கலவைகளான பழைய வடிவ அரசு கல்வெட்டுகள், மகாபலிபுரம் போன்ற கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொன்மைகளை கண்டுபிடித்தோம்.

அதேபோல், வட்டெழுத்துகள் எடுத்துள்ளோம். மேலும், கி.பி.1775 மற்றும் கி.பி.1778 ராபர்ட் ஓர்மின் வரைபடம், கி.பி.1710, 1719, 1726, 1740, 1794-ல் ஆங்கிலேயர் மற்றும் டச்சு வரைபடங்கள் இந்த நகரை கீழ்பட்டினம் என்று அழைத்ததை உறுதி செய்தோம். இவை அனைத்தையும் வருவாய்த் துறையிடம் தெரிவித்து, ஆவணப்படுத்தினோம்.

இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். இது குறித்து முந்தைய ஆட்சியர் செந்தில் ராஜ், தற்போதைய ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். தற்போது, பட்டினமருதூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலம் கீழ்பட்டினம் நகரத்தில் வாழ்ந்த தமிழர்களின் மிக நீண்ட கலாச்சார பாரம்பரியம் உலகுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

x