ஈர நில கணக்கெடுப்பின் முடிவின்படி, கோவை வனக் கோட்டத்தில் 182 வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025 தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நில பறவைகள் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை வனக் கோட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு கடந்த வாரம் மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் கோவை வனக் கோட்டத்தில் உள்ள 25 ஈர நிலங்களில் நடைபெற்றது.
இதில் 80-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் பங்கேற்றனர். கணக்கெடுப்பு முடிவின்படி மூலம் கோவை வனக் கோட்டத்தில் 182 வகை பறவைகள் கண்டறியப்பட்டன. கோவை வனக் கோட்டத்தில் உள்ள செங்குளம் ஏரியில் மட்டும் அதிகபட்சமாக 86 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. கிருஷ்ணம்பதி ஏரியில் 83 வகை பறவைகள், பேரூர் செட்டிபாளையம் ஏரியில் 81 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நில பறவைகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. கணக்கெடுப்பு இன்று (மார்ச் 16) நிறைவடைய உள்ளது. இந்த கணக்கெடுப்பின் கலந்தாய்வுக் கூட்டம் மாநில வனப் பணிகளுக்கான மத்திய வன உயர் பயிற்சியக கலந்தாய்வு அரங்கில் நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் என்.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கோவை நேச்சர் சொசைட்டி, தமிழ்நாடு இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சொசைட்டி, உலக இயற்கை வன நிதியம் ஆகிய அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். உலக ஈர நில தின வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆன்லைன் ஓவியம் மற்றும் புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.