திருமங்கலம் அருகே 12ம் நூற்றாண்டு பாண்டியர் கால பெருமாள் சிற்பம்: வெளியான ஆச்சர்ய தகவல்!


மதுரை: திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், கல்லூரி மாணவர் தர்மராஜா, ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு செய்தபோது பெருமாள் சிற்பம் கண்டறிந்தனர்.

இது குறித்து அக்குழுவினர் கூறியதாவது: பெருமாள் சிற்பமானது நான்கடி உயரமுடைய கல்லில் தனிச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். சிற்பத்தில் 4 கரங்களும், கரங்களில் சுதர்சன சக்கரம், சங்கும் இடம்பெற்றுள்ளது. தலைப்பகுதி கிரீட மகுடமும், மார்பில் ஆபரணங்களும், முப்புரி நூலும் இடம்பெற்றுள்ளது. ஆடையானது கெண்டைக்கால் வரை இடம்பெற்றுள்ளது.

சிற்பத்தின் வடிவமைப்பானது பிற்கால பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது எனலாம். மேலும் இப்பெருமாள் சிற்பத்துக்கு வலப்புறம், இடப்புறம் ஸ்ரீ தேவி, பூமா தேவி சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இச்சிற்பங்கள் உள்ள பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று இருந்துள்ளது. இக்கோயில் பாண்டியர் காலத்தில் சிறந்த வழிபாட்டில் இருந்துள்ளதை இச்சிற்பங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x