சிலர் சிறு வயது முதலே ஒல்லியாகவே இருப்பர். சாப்பாட்டில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் உடல் எடை அதிகரிப்பது இல்லை என்று கவலை கொள்வர். அவர்களுக்கு ‘உடல் எடை அதிகரிக்க என்னதான் சாப்பிடுவது?’ என்ற கேள்வி எழும். அதற்கான பதில் இங்கே...
“பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. பெற்றோர் ஒல்லியாக இருந்தால் பிள்ளைகளும் ஒல்லியாக இருக்க அதிக சாத்தியம் உண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் ‘உடல் ஒல்லியாக உள்ளதே’ என்று கவலைப்படத் தேவையில்லை.
ஒல்லியாக இருப்பவர்கள் தங்களது உணவில் கூடுதல் கவனம் செலுத்தலாம். உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்து பெரிதும் உதவுகிறது. பால், பாலில் இருந்து உருவாக்கப்பட்ட தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பாலாடைக்கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. இவற்றை அதிகமாகச் சாப்பிடலாம்.
முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைக்கட்டிய பயறு போன்றவை புரதம் நிறைந்தவை. அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.
சைவ உணவான உளுத்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உளுந்தங்களி, உளுந்த வடை, இட்லிப் பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் புஷ்டியாக வளரும்.
தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம். மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரி, அவித்த வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறுகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது உடலை வளர்க்க உதவும். வாரம் இரு முறை இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும். தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும்.
உடல் தசைகள் பொலிவு பெறுவதற்குச் சிறிதளவு கொழுப்பும் தேவை. இதை நெய், வெண்ணெய், எண்ணெய், தயிர், ஆட்டிறைச்சி, முட்டை போன்றவற்றில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது, மதிய உணவின்போது பருப்பில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது, தயிர் அல்லது லஸ்ஸி குடிப்பது, மாலையில் இரண்டு வடை அல்லது நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது போன்ற உணவுப் பழக்கங்களால் தேவையான அளவுக்குக் கொழுப்புச் சத்து கிடைத்துவிடும். இவற்றின் மூலம் உடல் மினுமினுப்படையும்.
இயற்கைப் பழச்சாறு, பால், மில்க் ஷேக், லஸ்ஸி போன்ற பானங்களையும் அருந்துங்கள். கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு, சிப்ஸ் போன்ற மாவுச் சத்து நிறைந்தவற்றை அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றாக உடல் வளர்ச்சி பெற்று வரும்போது திடீரென்று உடல் மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்கள்தான் காரணமாக இருக்க முடியும். அத்தகையோர் நிச்சயம் மருத்துவரை நேரில் அணுக வேண்டும்” என்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்.