மேற்கத்திய உணவு முறை காரணமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. இதன் பாதிப்புகள் என்னென்ன? தடுப்பு வழிகள் என்னென்ன?
“யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் உண்டாகிற ஒரு கழிவுப்பொருள். கல்லீரலில் உள்ள பிரச்சினை காரணமாக இது அதிக அளவில் உற்பத்தி ஆனாலும், உடலில் வேறு ஏதாவது உறுப்பில் பிரச்சினை இருந்து, யூரிக் அமிலம் வெளியேறுவதற்கு அது தடையாக இருந்தாலும் ரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கும்.
சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மி.கி. வரையிலும் ஆண்களுக்கு 8 மி.கி. வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிகங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’ (Gout) எனும் மூட்டுவலி வருகிறது. மேலும், இந்த அமிலம் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அப்போது சிறுநீரகங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உள்ளவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிப்பது ஆபத்தானது. அதிகரிக்கும் ஒவ்வொரு மில்லி கிராமும் இதய நோயை மோசமாக்கி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே இதயம் செயல் இழந்திருந்தால் (Heart failure), அந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.
யூரிக் அமில பாதிப்பு பெரும்பாலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பரம்பரை ரீதியாகவும் இது ஏற்படலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு, சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.
அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. ‘லீவோ டோப்பா’ எனும் மாத்திரையைச் சாப்பிடுபவர்களுக்கு இந்த அமிலம் அதிகரிக்கும்.
சிறுதானிய உணவு, முழுதானிய உணவு, பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவிலும் மதுவிலும்தான் யூரிக் அமிலம் அதிகம்.
உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. சாராயம் குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் எவ்வளவு சிரமப்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
எனவே கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல், மீன், நண்டு போன்ற அசைவ உணவின் அளவைக் குறைத்துக்கொண்டால், பீர் உள்ளிட்ட மதுவை மறந்தால் யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பது தடுக்கப்படும்.
வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற அதிக இனிப்புள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைத்தாலே இந்த அமிலப் பிரச்சினையும் சரியாகிவிடும்” என்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்.