திண்டுக்கல்: சிறுமலையில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. ஒரு பழம் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை வாழைப்பழமும், பலாப்பழமும் பிரசித்தி பெற்றவை. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி இருப்பதால், திண்டுக்கல் சிறுமலை செட் மற்றும் மார்க்கெட்டுக்கு பலாப்பழம் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. 3 மாதம் வரை சீசன் இருக்கும். சிறிய பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.150-க்கும், பெரிய பலாப்பழம் ரூ.250 முதல் ரூ.500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் பலாப்பழம் விற்பனை களை கட்டியுள்ளது. இது குறித்து சிறுமலை வியாபாரி ஒருவர் கூறும் போது, சிறுமலை பலாப்பழத்துக்கு தனி ருசி உண்டு. சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.