பூச்சிக்கொல்லியால் உயிரிழக்கும் தேனீக்கள்: பழநி, நத்தம் பகுதிகளில் தேனீ வளர்ப்போர் கவலை


படங்கள்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: பழநி, நத்தம் பகுதிகளில் மாமரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்க தெளிக்கும் பூச்சி மருந்துகளால் தேன் சேகரிக்க செல்லும் தேனீக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றன. இதனால் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் நத்தத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காசா, செந்தூரம், கல்லாமை, மல்கோவா, கிளிமூக்கு போன்ற மா வகைகள் 16,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

நடப்பாண்டில் தொடர் மழை, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாம்பூக்கள் பூக்கும் பருவம் தாமதமானது. தற்போதுதான் மா மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். பூக்கள் உதிர்வதை தடுக்கவும், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் ரசாயன பூச்சி மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்க இயற்கை விவசாய முறையில் வழி இருந்தும், பெரும்பாலான விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். பழநி, நத்தம், வேடசந்தூர் பகுதிகளில் மாம்பூக்களில் தேன் சேகரிக்க செல்லும் தேனீக்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளின் நச்சுத் தன்மையால் கொத்து கொத்தாக இறக்கின்றன. இதன் காரணமாக பயிர்களுக்கு நடுவே தேனீப் பெட்டிகளை வைத்து தேன் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பழநியைச் சேர்ந்த இசாக் கூறியதாவது: மா சீசன் வந்தாலே தேனீக்களுக்கு ஆபத்து தான். ரசாயன பூச்சிக் கொல்லிகளால் தேனீக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றன. தேன் சேகரிக்க செல்லும் தேனீக்கள் தேனை சேகரிக்க முடியாமலும், மீண்டும் கூட்டுக்குத் திரும்ப முடியாமலும் மயங்கி விழுந்து இறக்கின்றன. தேனீக்கள் இருக்கும் பகுதியில் பழ மரங்கள், காய்கறிகள், பயிர்களின் விளைச்சல் இரட்டிப்பாக கிடைக்கும்.

ஆனால், பூச்சி மற்றும் நோய் தாக்காமல் இருக்கவும், மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வீரியமிக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் மாமரங்களில் தெளிக்கின்றனர். இதனால் பயிர் வளர்ச்சிக்கு உதவும் தேனீக்கள், வண்டுகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உயிரிழக்கின்றன. இதை தடுக்க ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதையும், அதன் பயன்பாட்டையும் கட்டுப் படுத்த வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

x