ஸ்ரீரங்கம்: “அன்புள்ள அப்பா”... என்று தொடங்கும் 10 வயது மகள் எழுதிய கவிதையை 5 வயது மகள் வாசித்த நிகழ்ச்சி அரசுப் பள்ளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் டாக்டர் ராஜன் நினைவு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறந்த அரசுப் பள்ளியாக செயல்படும் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கல்விக் கண்காட்சி மற்றும் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைமையாசிரியை ஜோ லில்லி ப்ளோரா வரவேற்றார்.
அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர், பள்ளியின் முன்னாள் முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் தன்னம்பிக்கை உரையாற்றினார். தொடர்ந்து, அறிவியல், கணிதம், தமிழ் என பாடம் சார்ந்த பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுப்படுத்தி இருந்தனர். குறிப்பாக, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 'வேக்யூம் கிளினர்' செய்திருந்த மாணவரின் படைப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
அப்பா கவிதை: முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜீவிதா, தனது அப்பா பற்றிய கவிதையை அழகாக ஏற்ற இறக்கத்துடன் வாசித்துக் காட்டினாள். உணர்ச்சியோடு அவள் கவிதை வாசித்ததை கண்டு அனைவரும் வியந்து போயினர். இக்கவிதையை எழுதிய ஆசிரியர் மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தபோது, அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால், இந்த கவிதையை எழுதியது, இங்கு 5-ம் வகுப்பு படிக்கும் அவளது அக்கா சஹானா.
கவிதையை நீ எழுதிவிட்டு தங்கையை வாசிக்க அனுப்பி வைத்தது ஏன்? என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, தங்கையை ஊக்குவிக்கும் விதமாக மேடைக்கு அனுப்பி வைத்ததாக கூறினாள். சகோதரிகளின் அன்புள்ள அப்பா கவிதை, ராஜன் பள்ளி நூற்றாண்டு விழா மணிமகுடத்தில் வைரக்கல்லாக மின்னியது என்றே கூறலாம்.