தருமபுரி ஆச்சர்யம்: 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!


தருமபுரி: பென்னாகரம் அருகே 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக நிறைந்து காணப்படும் வரலாற்றுச் சின்னங்களில் பல, ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்றளவும் கண்டறியப்படாத, கவனம் பெறாத வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. பென்னாகரம் பகுதியில் இவ்வாறு கவனம் பெறாத வகையில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளில் ‘பென்னாகரம் வரலாற்று மையம்’ என்ற அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அமைப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பென்னாகரம் ஒன்றியம் மஞ்ச நாயக் கன அள்ளி பகுதியில் பெரும் கற்கால ஈமச் சின்னங்கள், பாறை ஓவியங்கள் இருப்பதாக அறிந்த இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள், சந்தோஷ், குமார், முதுகலை ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர். கல்குத்து மேடு என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் பெரும் கற்கால ஈமச் சின்னங்கள் மற்றும் பாறை ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியம், சமவெளியில் உள்ள சிறிய கற்பாறையின் மீது கற்கீரல் ஓவியமாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த பாறை ஓவியங்கள் குறித்து, பாறை ஓவியங்கள் தொடர்பான தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியது: புதிய கற்காலத்தைச் சார்ந்த இந்த கற்கீரல் ஓவியம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். யானை மற்றும் மாட்டின் உருவம் இந்த ஓவியத்தில் காணப்படுகிறது. உருவங்கள் நேர்த்தியான உடலமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. 12 x 40 செ.மீ. அளவில் இந்த ஓவியம் உள்ளது. யானை மட்டும் காணப்படும் இந்த ஓவியம் அரிதானது.

இந்த பகுதியில் காட்டு மாடுகள் மற்றும் யானைகள் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்திருக்கலாம்.இப்பகுதியில் இவ்வாறான விலங்குகளின் நடமாட்டத்தை உணர்ந்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை அறிவிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இவ்வாறு கூறினார்.

இந்த பாறை ஓவியங்கள் உள்ள பகுதியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் பெருங் கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள், குத்துக்கல், கல் திட்டை, கல் வட்டங்கள் மற்றும் கல் ஆயுதங்கள் உருவாக்கிய இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

x