பசலை, முருங்கை, வெந்தயக் கீரை - யாருக்கு எந்தக் கீரை நல்லது?


பொதுவாக, ஆர்கானிக் கீரைகள்தான் மிகவும் நல்லது. வீட்டிலேயே வளர்க்கப்படும் கீரையும் நல்லது. வெளியில் வாங்கப்படும் கீரைகளை தண்ணீரில் நன்கு அலசி சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். சமைக்கும்போது நன்றாக வெந்த கீரைகள், அவற்றிலுள்ள சத்துக்கள் எல்லாவற்றையும் நமக்குத் தரும். அதற்காக அதிக வெப்பநிலையில் கீரையை அதிக நேரம் வேகவைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால், அதிலுள்ள வைட்டமின் சி அழிந்துவிடும். மூன்று கீரைகளின் நன்மைகளைப் பார்ப்போம்.

பசலைக் கீரை:

பசலைக் கீரையே ‘கீரைகளின் அரசன்’ என அழைக்கப்படுகிறது. காரணம், குறைந்த அளவில் இருந்தாலும் பல சத்துகளைக் கொண்ட கீரை இது. வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், அமினோஅமிலம் எனப் பல சத்துகள் நிறைந்ததுதான் பசலைக் கீரை.

பசலைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு வாய்ப் புண் வராது. அதேபோல், இரைப்பைப் புண்ணும் வராது. உடலுக்கு வலிமை தருவதுடன், நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வல்லமையும் பசலைக் கீரைக்கு உண்டு.

பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிடுவோரை சிறுநீரகப் பிரச்சினைகள் அண்டுவதற்கு அஞ்சும் என்பதும் கவனிக்கத்தக்கது. பாலூட்டும் பெண்களுக்கு அற்புத உணவாகவே கருதப்படுகிறது ‘பசலைக் கீரை’.

முருங்கைக் கீரை:

முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை அதிகமாக உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்களும் முருங்கைக் கீரையில் தேவைக்கு உள்ளன.

முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள், கண்களுக்கு மிக நல்லது. அத்துடன், ரத்தசோகையைப் போக்க உதவும் தன்மையும் முருங்கைக் கீரைக்கு உண்டு. எலும்பு வளர்ச்சிக்குத் துணை செய்யும் முருங்கைக் கீரை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

இரைப்பைப் புண்ணைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட முருங்கைக் கீரையில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது. இதய நோயாளிகள் தாராளமாக சாப்பட வேண்டிய முக்கிய உணவாகவே திகழ்கிறது முருங்கைக் கீரை.

வெந்தயக் கீரை:

வெந்தயக் கீரையில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ மிக அதிகமாக இருக்கிறது. இரும்புச் சத்தும் நார்ச் சத்தும் ஓரளவு இருக்கின்றன. வெந்தயக் கீரையில் கால்சியம், பீட்டா கரோடின் நிறைய இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை தேவைக்கு உள்ளன. பொட்டாசியம் குறைந்த அளவில் உள்ள வெந்தயக் கீரை, பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்கிறது.

இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் வெந்தயக் கீரை ஒரு சிறந்த உணவு. மூளை நரம்புகளுக்கு நன்மை பயக்கும் வெந்தயக் கீரை, சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றது என்பதும் மிக முக்கிய அம்சம்.

x